பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டம்:பயனாளியின் வீட்டில் கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகராட்சி ஜக்கப்பன் நகரில், - கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் சார்பில், பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில், பயனாளி சக்தி நாராயணன் வீட்டில், 2.20 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 78,000 ரூபாய் மானியத்தில், சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சாரம் வீட்டில் பயன்படுத்தப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சூரிய சக்தியை பயன்படுத்தி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டமான, பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம், மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இதில், அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் விண்ணப்பிக்கலாம். வங்கிகள் மூலம் உடனடியாக கடன் பெறலாம். மேலும், மத்திய அரசு ஒரு கிலோ வாட்-டுக்கு, 30,000 ரூபாய் மானியம், 2 கிலோ வாட்-க்கு, 60,000 ரூபாய், 3 கிலோ வாட் அதற்கு மேல், 78,000 ரூபாய் மானியம் வழங்குகிறது. மேலும், சூரிய ஒளி தகடு பொறுத்தவதற்கு, ஜி.எஸ்.டி., வரி, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோவாட் சூரிய தகடு ஒரு நாளில், 4 முதல், 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும். நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்ப பெறலாம். இத்திட்டத்தில், www.pmsuryaghar.gov.inஎன்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.தமிழ்நாடு மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் கவிதா, செயற்பொறியாளர் பவுன்ராஜ், உதவி செயற்பொறியாளர் நளினி, உதவி இயக்குனர் சிதம்பரம், தாசில்தார் சின்னசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.