போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, பண்ணந்துாரிலிருந்து தட்ரஹள்ளி செல்லும் சாலையில், இ.பி., பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கிருந்த நிழற்கூடம் சேதமானதால், அதை அகற்றி விட்டு, ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரையின் தொகுதி மேம்பாட்டு நிதியில், 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய நிழற்கூடம் அமைக்கப்பட்டது. இதன் நுழைவாயில் பகுதியில் இருந்த மின்கம்பத்தில், புதிதாக அப்பகுதி மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க, மின்வாரியம் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்தது.இந்த டிரான்ஸ்பார்மரால், அப்பகுதி மக்கள் நிழற்கூடத்திற்குள் செல்லவும், அந்த வழியாக செல்லும் பஸ்களில் ஏறவும், இறங்கவும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, டிரான்ஸ்பார்மரை அகற்ற வேண்டும். அதேபோல் மழைக்காலங்களில் இடி, மின்னலின் போது ஏதாவது அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறி, டிரான்ஸ்பார்மரை வேறிடத்தில் மாற்றியமைக்க பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, டிரான்ஸ்பார்மர் மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின், ஏ.இ., அசோக்குமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், சமரச பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக டிரான்ஸ்பார்மரை அகற்றுவதாக கூறியதையடுத்து, அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.