கவுன்சிலர்களிடம் மனுகொடுத்த குடியிருப்புவாசிகள்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வருகை தந்த மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் கவுன்சிலர்களிடம், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் துரை தலைமையில், மாநகராட்சி அலுவலக வாசலில் வைத்து கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது:ஓசூர் மாநகராட்சியில் கடந்த, 2006 அக்., 1ல், 3 மடங்காக உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டண உத்தரவை, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக, அப்போதைய எம்.எல்.ஏ.,வும், தற்போதைய மேயருமான சத்யா வாக்குறுதி அளித்தார். கடந்தாண்டு டிச., 21ல், பாதாள சாக்கடை திட்டத்தை துவக்கி வைக்க வந்த அமைச்சர் நேரு, 2017 முதல், நிலுவையில் உள்ள குப்பை வரியை, 2022 மார்ச் வரை, 5 ஆண்டுக்கு தள்ளுபடி செய்ய முதல்வரிடம் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதை நிறைவேற்ற, மாநகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆண்டுக்கு, 6 சதவீதம் வரி உயர்வை, திருப்பூர், துாத்துக்குடி மாநகராட்சிகள் போல் தீர்மானம் நிறைவேற்றி, உயர்த்திய வரியை ரத்து செய்ய வேண்டும். பாகலுார் சாலை பணியை காலதாமதமின்றி விரைந்து துவங்கி முடிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.