உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க.,வினருடன் கைகோர்த்து கையெழுத்திடாத துணைத்தலைவர் ஓசூர் ஒன்றிய கூட்டத்தில் நிறைவேறாமல் போன தீர்மானங்கள்

தி.மு.க.,வினருடன் கைகோர்த்து கையெழுத்திடாத துணைத்தலைவர் ஓசூர் ஒன்றிய கூட்டத்தில் நிறைவேறாமல் போன தீர்மானங்கள்

ஓசூர்: தி.மு.க., கவுன்சிலர்களுடன் சேர்ந்து ஒன்றிய குழு துணைத்தலைவர் கையெழுத்து போடாமல் சென்றதால், 1.60 கோடி ரூபாய் மதிப்பில் மக்களுக்கான வளர்ச்சி பணிகளுக்கு வைக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற முடியவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த சசி மற்றும் துணைத்தலைவராக நாராயணசாமி உள்ளனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம், 16 கவுன்சிலர்கள் உள்ளனர். தலைவர், துணைத்தலைவர் இடையே பிரச்னை உள்ள நிலையில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவுடன், துணைத்தலைவருக்கு வழங்கப்பட்ட அறை அகற்றப்பட்டது. மேலும், ஒன்றியக்குழு கூட்டத்தில், அவருக்கு தலைவருடன் அமர சீட் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், அ.தி.மு.க.,விற்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார் துணைத்தலைவர் நாராயணசாமி. மேலும், தி.மு.க., கவுன்சிலர்களுடன் நெருக்கம் காட்டி வந்தார். கடந்த, 6 மாதத்தில் நடந்த, 2 கூட்டத்தில் வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து, தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் துணைத்தலைவர் நாராயணசாமி கையெழுத்து போடாததால், தீர்மானங்கள் நிறைவேறவில்லை. நேற்று மீண்டும் அவசர கூட்டம் தலைவர் சசி வெங்கடசாமி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் பாலாஜி, சாந்தலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 16 கவுன்சிலர்களும் பங்கேற்றனர். 1.60 கோடி ரூபாய் அளவிலான வளர்ச்சி திட்ட பணிகள் உட்பட மொத்தம், 21 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. கூட்டம் ஆரம்பித்தவுடன், தி.மு.க., கவுன்சிலர்களான சம்பத், ரமேஷ், கோபால் ஆகியோர், 'ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு அவசர கூட்டத்தின் தீர்மான பொருள் அனுப்பி வைக்கப்படவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளாக, தி.மு.க., கவுன்சிலர்களுக்கு போதிய வளர்ச்சி நிதி ஒதுக்கவில்லை. அதற்கு பதிலளித்தவுடன் கூட்டத்தை நடத்துங்கள்' என்றனர்.இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டம் துவங்கிய பின் பேசிய அ.தி.மு.க., கவுன்சிலர் சந்தியா கோபி, ''தலைவர், துணைத்தலைவர் இடையே பிரச்னை உள்ளது. அதனால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் மக்கள் பணிகளை செய்ய முடியவில்லை. அவமானப்பட்டு வருகிறோம்,'' என்றார். அ.தி.மு.க., கவுன்சிலர் முரளி பேசுகையில், ''துணைத்தலைவருக்கு இருக்கையும், அறையும் தான் முக்கியம். மக்கள் பிரச்சனையை அவர் கண்டுகொள்ளவில்லை,'' என்றார்.அதற்கு,' ஆமாம்' என பதிலளித்த துணைத்தலைவர் நாராயணசாமி, ''பிரச்னை ரொம்ப துாரம் சென்று விட்டது,'' என கூறினார். தொடர்ந்து, தி.மு.க., கவுன்சிலர்கள், 7 பேர், துணைத்தலைவர் நாராயணசாமி, தே.மு.தி.க., கவுன்சிலர் உமா சீனிவாசன் ஆகிய, 9 பேர் தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திடவில்லை. இதனால், 1.60 கோடி மதிப்பினாலான திட்டப்பணிகள் நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.கடைசி நேரத்தில் தே.மு.தி.க., கவுன்சிலர் உமா சீனிவாசன், தி.மு.க., பக்கம் சென்றதால், ஒன்றியக்குழு தலைவர் சசிவெங்கடசாமி கோபமடைந்து பேசினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.சமாதானம் அடையாத துணைத்தலைவர்கூட்டத்திற்கு முன்னதாக, துணைத்தலைவர் நாராயணசாமியிடம் பேசிய அ.தி.மு.க.,வினர், தனியாக அறை அமைத்து தரப்படும். தலைவர் சசிவெங்கடசாமிக்கு அருகே கூட்டத்தில் இருக்கை போடப்படும் என அவரை சமாதானம் செய்து, தீர்மான பொருளில் கையெழுத்திடும்படி கேட்டனர். ஆனால், 'தி.மு.க., கவுன்சிலர்களிடம் கேட்க வேண்டும்' என, அவர் கூறி சென்றதால், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ