ஓசூர்: தமிழக, கர்நாடக மாநில எல்லையோரம் மற்றும் ஓசூர் சுற்றுவட்டாரத்தில், இராணிய கொள்ளையர்களின் கைவரிசை அதிகரித்து வருகிறது. கடந்த, 17 ல் டூவீலரில் வந்த இருவர், கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி, சூர்யா சிட்டி மற்றும் ஜிகினி போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்கு உட்பட்ட, 5 இடங்களில், ஓசூர் ஹட்கோ போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட, 3 இடங்களில் வழிப்பறி, நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.கர்நாடக மாநில எல்லையான, ஜிகினி அடுத்த நிசார்கா லேஅவுட் பகுதியில் அனிதா, 50, என்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த, 35 கிராம் தங்க நகை உள்பட, ஒரே நாளில், 8 இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள், 300 கிராம் எடையிலான, 38 சவரன் நகைகள் மற்றும் பணத்தை வழிப்பறி செய்து தப்பியது தெரியவந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களிலும் புகார் பதிவாகி உள்ளது. இது குறித்து கர்நாடக, தமிழக போலீசார் கூறுகையில், 'கர்நாடக மாநிலம், ஜிகினி, ஓசூர் சுற்றுவட்டாரத்தில், 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. அவர்கள் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய இராணிய கொள்ளையர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர்' என்றனர்.தமிழக, கர்நாடக மாநில எல்லை பகுதிகளை குறிவைத்து, இராணிய கொள்ளையர்கள், தொடர் வழிப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருவது, இரு மாநில மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.