உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் வனக்கோட்டத்தில் கடும் வறட்சி செயற்கை குட்டைகளில் நீர்நிரப்பும் வனத்துறை

ஓசூர் வனக்கோட்டத்தில் கடும் வறட்சி செயற்கை குட்டைகளில் நீர்நிரப்பும் வனத்துறை

ஓசூர் : ஓசூர் வனக்கோட்டத்தில், கடும் வறட்சியால், செயற்கை குட்டைகளில் வனத்துறையினர் நீர் நிரப்பி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், 1.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு, யானை, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பூனை, மயில்கள், கரடி, கடமான், புள்ளிமான், சாம்பல் நிற அணில், எகிப்திய கழுகு, புலி உட்பட பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன. ஓசூர் வனக்கோட்டத்தில் போதிய மழை பெய்யாததால், ஓசூர், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிமம் போன்ற வனச்சரக வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள் காய்ந்துள்ளன. அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இயற்கை குட்டைகள் நீரின்றி வறண்டுள்ளன. அதனால், யானைகள் கூட்டம் மட்டுமின்றி, மயில், மான் போன்ற பல்வேறு வகையான வனவிலங்குகள், தண்ணீர் தேடி கிராமங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால் மனித - விலங்கு மோதல் ஏற்படுகிறது. மேலும், விவசாய பயிர்கள் சேதமாகின்றன.இதை தவிர்க்கும் வகையில், அந்தந்த வனச்சரகத்தில் வனத்துறையினர் கட்டியுள்ள செயற்கை குட்டைகளில், டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது. அதேபோல், சோலார் மின்மோட்டார் மூலம், வனத்துறையினர் தொட்டிகளில் நீர் நிரப்புகின்றனர். இதில், மான், யானை, மயில், காட்டெருமை போன்ற, பல்வேறு வகையான வன விலங்குகள் தண்ணீர் குடித்து, தாகத்தை தீர்க்கின்றன. மழை இல்லாத நிலையில், கோடையை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் வனத்துறை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி