ஓசூர்: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயப்பிரகாஷ், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, அலசநத்தம், எம்.ஜி.ஆர்., சிலை, அசோக் பில்லர், தேர்ப்பேட்டை, காமராஜ் காலனி, காந்தி சிலை, அந்திவாடி, கர்னுார், குருபட்டி, அரசனட்டி உட்பட மொத்தம், 37 இடங்களில், இரட்டை இலை சின்னத்திற்கு நேற்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அசோக்பில்லர் பகுதியில், அ.தி.மு.க., கவுன்சிலர் தில்ஷாத் முஜிபூர் ரஹ்மான் முன்னிலையில், தி.மு.க., மீனவரணி துணை அமைப்பாளர் முரளி, 29வது, தி.மு.க., நிர்வாகிகளான கோபால், கோவிந்தராஜ் ஆகியோர், அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களை வரவேற்று, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசுகையில், ''அனைத்து மகளிருக்கும், மகளிர் உரிமைத்தொகை என கூறி விட்டு, 2.13 கோடி ரேஷன்கார்டுதாரர்களில், ஒரு கோடி பேருக்கு மட்டுமே, முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை வழங்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டு வந்து, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, பல்வேறு திட்டங்களை செய்துள்ளோம். ஆனால் எதையும் செய்யாமல், மக்களை ஏமாற்றி, முதல்வர் ஸ்டாலின் ஓட்டு கேட்டு வருகிறார்,'' என்றார்.மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, துணைச்செயலாளர் மதன், முன்னாள் மாநகர செயலாளர் நாராயணன், கவுன்சிலர் குபேரன், பகுதி செயலாளர் ராஜி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.