கிருஷ்ணகிரி: ஆவணி மாத பவுர்ணமி நாளுக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில், வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது.கிருஷ்ணகிரியில், பெண்கள் வீடுகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். நெய் விளக்கேற்றி, மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடி தியானித்தனர். லட்சுமி படம் வைத்து துாபம் காட்டி, தீபாராதனை செய்தனர். வீட்டிற்கு வந்த பெண்களுக்கு வளையல்களை கொடுத்து மகிழ்ந்தனர். சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்புகளைப் படைத்து அனைவருக்கும் வழங்கினர்.கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதியில் உள்ள துளுக்காணி மாரியம்மன் கோவிலில், குத்துவிளக்குப் பூஜை நடந்தது. இதே போல், மாவட்டம் முழுவதும் பெண்கள் வீடுகளில் தோரணம் கட்டி, மகாலட்சுமியை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். * தர்மபுரி மாவட்டம், அரூர், பழையபேட்டை மகா சக்தி மாரியம்மன் கோவிலில், வரலட்சுமி நோன்பையொட்டி, நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பங்கேற்ற சுமங்கலி பெண்களுக்கு தாலிக்கயிறு, குங்குமம், மஞ்சள், சிவப்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பூசாரி முருகேசன் செய்திருந்தார்.அரூர் கடைவீதியில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், வரலட்சுமி நோன்பையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான ஆர்ய வைசிய சமூக பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஆடி வெள்ளிஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தர்மபுரி பாரதிபுரம் சாலை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு நேற்று பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கடகத்துார் பட்டாளம்மன், கொளகத்துார் பச்சையம்மன், கோட்டை கல்யாணகாமாட்சி அம்மன், எஸ்.வி.,ரோடு அங்காளம்மன், நெசவாளர்காலனி செளடேஸ்வரி அம்மன், அதியமான்கோட்டை மேல் காளியம்மன் கோவில், செந்தில்நகர் புற்று மாரியம்மன் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் அபிேஷகம் மற்றும் அலங்காரங்கள் நடந்தன.