ஒகேனக்கல்லில் நீர்வரத்து 28,000 கனஅடியாக நீடிப்பு
ஒகேனக்கல் :ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, 28,000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. 16 வது நாளாக குளிக்க, பரிசல் சவாரிக்கு தடை தொடர்கிறது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி, காவிரியாற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுவில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும், 28,000 கன அடியாகவே வந்தது. இதனால், மெயின்அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. தொடர்ந்து, 16 வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தர்மபுரி மாவட்டத்தின் தடை தொடர்கிறது.