| ADDED : ஜூலை 12, 2011 12:15 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் அரசு கள்ளர் மாணவர் விடுதிகளில் திடீர் சோதனை நடத்திய கலெக்டர், காப்பாளர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்தார். மதுரை மாவட்டத்தில் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் அரசு கள்ளர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக வந்த தகவல்களை அடுத்து, கலெக்டர் சகாயம் அங்கு திடீர் விசிட் நடத்த முடிவெடுத்தார். நேற்று முன்தினம் அவர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் தலைமையில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டன. அனைத்து குழுக்களையும் ஒரே நேரத்தில் விடுதிகளில் சோதனையிடும்படி உத்தரவிட்டார். இதையடுத்து செக்கானூரணி, உசிலம்பட்டி, நாட்டாமங்கலம், திருநகர், கருப்பாயூரணி உட்பட 24 விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல விடுதிகளில் அதிகளவு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மாணவர் வருகைப் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாதது, விடுதிகளில் வார்டன் தங்காதது, உணவு வழங்கியதற்கும், மாணவர் வருகைக்கும் சம்பந்தமே இல்லாதது என பல முறைகேடுகளை கண்டறிந்தனர். இதையடுத்து, விடுதி காப்பாளர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்தும், 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.