| ADDED : ஜூன் 03, 2024 03:24 AM
உசிலம்பட்டி: காதணி விழாவிற்கு சீர்கொண்டு வந்த ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் 2 சிறுமிகள் உள்ளிட்ட 8 பெண்களுக்கு கால்களில் காயம் ஏற்பட்டது.உசிலம்பட்டியில் வீட்டு விசேஷங்களின்போது நடத்தும் ஊர்வலத்தில் சக்தி வாய்ந்த வெடிகளை வெடித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். அடுத்தடுத்து வெடிக்கும் வெடிகளை தலையில் துாக்கிக் கொண்டு நடப்பது, சரவெடிகளை ரோட்டில் இழுத்தபடி செல்வது, வெடியை பற்ற வைத்து வானில் எறிந்து வெடிக்க வைப்பது என பல்வேறு சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் வெடி வெடிக்க தடை உள்ளது. தடையை மீறி வெடிகளை வெடிக்கின்றனர்.நேற்று உசிலம்பட்டி வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் காதணிவிழா நடந்தது. இதற்கு தாய்மாமன் சீர்வரிசையாக அன்னம்பாரிபட்டியில் இருந்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் கருப்புகோயில் அருகே செல்லும் போது ரோட்டில் வைத்த சக்திவாய்ந்த வெடி திடீரென ஊர்வலத்தின் நடுவில் வெடித்தது.இதில் அன்னம்பாரிபட்டி, உச்சப்பட்டியைச் சேர்ந்த 2 சிறுமிகள், வத்தலக்குண்டைச் சேர்ந்த நித்யா 35, வைரசிலை 52, செல்வி 38, சத்யா 27, பெரியகுளம் பூங்கனி 38, உசிலம்பட்டி சானியா 20 ஆகிய 8 பேருக்கு கால்கள், தொடை பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான காயம் இல்லாமல் தப்பினர். உசிலம்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். லேசான காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு வரவில்லை.உசிலம்பட்டி போலீசார் விழா நடத்தியவர்கள், சீர் கொண்டு வந்தவர்கள் வெடி வெடித்துச் சென்றவர்கள் என 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.