| ADDED : ஜூன் 04, 2024 06:33 AM
மதுரை: நடப்பாண்டிற்கான (2024) பத்ம விருதுக்கு மதுரையைச் சேர்ந்த தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் கூறியதாவது: இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப்பணி, வியாபாரம் மற்றும் தொழில் துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு நாட்டின் இரண்டாவது உயரிய பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வாழ்நாளில் தனித்தன்மையுடன் சிறப்பாக சாதனை செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த சாதனை எல்லோராலும் விரும்பத்ததக்கதாக இருக்க வேண்டும். உயர்ந்த தரநிர்ணயத்தின் மூலம் தேர்வு செய்யப்படுவதால் ஏற்கனவே அவர்கள் சார்ந்த துறையில் தேசிய விருதோ அல்லது குறைந்தபட்சம் மானிய விருதோ பெற்றிருக்க வேண்டும். பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள், நலிவடைந்த சமுதாயத்தினர்,தாழ்த்தப்பட்டோர், சீர்மரபினர், மாற்றுத்திறனாளிகளில் தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு விருதிற்கு பரிந்துரை செய்யப்படும். தகுதியானவர்கள் இந்த விருது அறிவிக்கும் தேதியிலிருந்து ஓராண்டிற்குள் இறந்திருந்ததால் அவர்களது பெயரை இவ்விருதிற்கு பரிசீலிக்கலாம். ஏற்கனவே பத்ம விருது பெற்றிருந்தால் ஐந்தாண்டுக்கு பின் விண்ணப்பிக்கலாம். அரசு பணியாளர் மற்றும் பொது நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் டாக்டர், விஞ்ஞானிகள் தவிர மற்றவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது என்றார்.ஆன்லைனில் awards.gov.in/ padmaawards.gov.inஇணையதளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து ஜூன் 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.