உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குப்பைக்கு நடுவே குமுறும் சிந்தாமணி வார்டு 89ல் அவலம்

குப்பைக்கு நடுவே குமுறும் சிந்தாமணி வார்டு 89ல் அவலம்

மதுரை: மதுரை சிந்தாமணி பகுதி மக்கள் 'குப்பை கிடங்கிற்கு நடுவில் வசிக்கிறோம். அதிகாரிகளின் மெத்தனத்தால் தீராத பிரச்னைகளால் சிரமப்படுகிறோம்' என புலம்பினர்.மதுரை 89 வது வார்டில் சிந்தாமணி, ராணிநகர், காமாட்சியம்மன் கோயில் பகுதி உட்பட பல தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் பல ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஆனால் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி தினமும் மனம் குமுறுகின்றனர்.

குப்பையால் நிறைந்த நதி

கண்ணன், சிந்தாமணி: இங்குள்ள கிருதுமால் நதியில் நான் இளைஞனாக இருந்த போது குளித்து மகிழ்ந்துள்ளேன். ஆனால் இன்று அந்த நதி குப்பையால் நிறைந்து கிடக்கிறது. நதி அடைபட்டதால் கழிவுநீர் வீடுகளுக்குள்ளும் வருவது, வேதனை தருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை அமைக்கிறோம் என்றுகூறி, இன்று வரை எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. இங்கு தண்ணீர் பற்றாக்குறையும் இருக்கிறது. மாநகராட்சி தண்ணீர் வாரம்ஒரு முறையே வருகிறது. அதுவும் 20 நாட்களாக வராததால் சிரமப்படுகிறோம். இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் என எங்கு பார்த்தாலும் குப்பையே தென்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. அதிகாரிகள் குப்பையை அகற்றினாலே இங்குள்ள பாதி பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றார்.

தெருவிளக்கு சரியில்லை

சண்முகம், காமாட்சி அம்மன் கோயில் பகுதி: பாதாள சாக்கடை இல்லாமல் கழிவுகள் ரோடுகளில் தேங்கி நிற்கிறது. மழை நேரங்களில் இன்னும் நிலைமை மோசமாக இருக்கும். அப்போது வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலையும் ஏற்படும். கழிவுநீரில் குப்பையும் கலந்து வருவதால் பலர் தொற்று நோயால் பாதித்துள்ளனர். ராணி நகர் பகுதியில் மின் விளக்குகள் சரியாக பொருத்தப்படாமல் அடிக்கடி அணைந்து விடுகிறது. இதனால் இரவு நேரங்களில் திருட்டு, வழிப்பறி நடக்கிறது. பிரச்னைகளுக்கு தீர்வுகாண அதிகாரிகளை வலுக்கட்டாயமாக அழைக்க வேண்டியுள்ளது. அவர்களை தொடர்பு கொள்ளவும் சிரமமாக உள்ளது என்றார்.

பணியாளர்கள் பற்றாக்குறை

கவுன்சிலர் கவிதா: சாக்கடை, குப்பைக் கழிவுகளை அகற்ற ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கிறது. இதனால் குப்பை வண்டிகள் உபயோகப்படுத்தப்படாமல் உள்ளன. துாய்மைப் பணியாளர்கள் 53 பேர் தேவை. ஆனால் 35 பேர் தான் உள்ளனர். அதனால் இங்கு கழிவுகளை அகற்றுவதில் சிரமம் உள்ளது. சுகாதார அதிகாரிகளிடம் முறையிட்டாலும் மெத்தனம் காட்டுகின்றனர். ராஜாஜி நகர் பகுதியில் ரோடுகள் மோசமாக உள்ளதால் மழை நேரத்தில் தண்ணீர் வீட்டிற்குள் சென்றுவிடும். கொசுத் தொல்லையும் அதிகமாக இருக்கும். இன்னும் 15 துாய்மைப் பணியாளர்களை நியமித்தால் இச்சிரமங்களை ஒரளவு சரிசெய்யலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை