உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சட்டசபை தேர்தலை கருத்திற்கொண்டு முதல்வர் ஸ்டாலின் முதலை கண்ணீர்: உதயகுமார் கொதிப்பு

சட்டசபை தேர்தலை கருத்திற்கொண்டு முதல்வர் ஸ்டாலின் முதலை கண்ணீர்: உதயகுமார் கொதிப்பு

மதுரை : ''சட்டசபை தேர்தலை கருத்திற்கொண்டு அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், 'அம்மா உணவகங்களை மூடி விடுவோம்' என எதிர்க்கட்சிகள் புரளி கிளப்பியதாக முதலை கண்ணீர் வடித்துள்ளார்'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது:அம்மா உணவகங்களில் விலையில்லாமல் மூன்று வேளையும் உணவுகள் வழங்கப்பட்டன. இதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அம்மா என்ற சொல்லை கேட்டாலே காதில் ஈயம் காய்ச்சி ஊற்றுவது போல் பதறும் இந்த ஆட்சியாளர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே அம்மா உணவகங்களை அடித்து நொறுக்கியும், பணிபுரியும் பெண்கள் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காக குறைத்தும் படிப்படியாக மூடு விழா நடத்தினர். அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் 90 சதவீதம் குறைக்கப்பட்டது, பழுதடைந்த உபகரணங்கள் சீர் செய்யப்படவில்லை. சென்னையில் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சிக்கு இடம் தேவை என்று பல அம்மா உணவகங்கள் மூடப்பட்டன.வரும் சட்டசபை தேர்தலை கருத்திற்கொண்டு அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், 'அம்மா உணவகங்களை மூடி விடுவோம்' என எதிர்க்கட்சிகள் புரளிகளை கிளப்பியதாக முதலை கண்ணீர் வடித்துள்ளார். இதை கண்டித்த அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, கடந்த 3 ஆண்டுகளில் முதல்வரோ, அமைச்சர்களோ, மேயரோ, எவரேனும் நேரில் சென்று ஆய்வு செய்தனரா என்று கேள்வி எழுப்பினார்.

சிரமத்தில் மக்கள்

தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது என்று கடந்த 3 ஆண்டுகளாக மாற்றி மாற்றி கூறி வரும் ஒரே பொய்யை நம்பி, பருவ மழையின் போது பெய்த சிறு மழைக்கே சென்னையில் பல இடங்களில் தேங்கிய தண்ணீராலும், ஐந்து நாட்கள் மின்சாரம் இல்லாமலும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். பருவமழை காலங்களில் இப்படி பொய் கூறி சென்னை மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியவர் தான் இந்த சேகர் பாபுஅதேபோல் தி.மு.க., அரசின் நான்கு நிலை நிதி அறிக்கையிலும், வடசென்னை வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக கூறிய சேகர்பாபு, இன்று வரை எத்தனை கோடி ரூபாய்க்கு வளர்ச்சி பணிகளை முடித்துள்ளார் என்று கூற முடியுமா. ஆட்சி பொறுப்பேற்று 38 மாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், மொத்தம் 208 பணிகள் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டதில் ஒரு பணி கூட முடிக்கப்படவில்லை என்று அவரே தனது பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார்.தி.மு.க., அரசு செய்த ஒரே சாதனை,ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில், ரூ.3.50 லட்சம் கோடி அளவில் கடன் சுமையை தமிழக மக்கள் தலையில் சுமத்தியது தான். இந்த கடனில் எவ்வளவு மூலதனச் செலவு செய்திருக்கிறார்கள் என்று முதல்வரும், சேகர்பாபுவும் மக்களிடம் விளக்கத் தயாரா. இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை