மதுரை : ''பத்தாண்டு காலமாக தமிழர்களை மதிக்காமல், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தாமல் வஞ்சித்து தமிழர்கள் மீது வன்மம் காட்டும் பிரதமர் மோடி, தற்போது எந்த முகத்துடன் ஓட்டு கேட்டு இங்கே வருகிறார்,'' என, மதுரையில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.மதுரை மா.கம்யூ., வேட்பாளர் வெங்கடேசன், சிவகங்கை காங்., வேட்பாளர் கார்த்தி ஆகியோரை ஆதரித்து மதுரை பாண்டிக் கோவில் அருகே நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:அடுத்து வரும் பிரதமர், 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பவராக, சமூக நீதி மீது அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். ஜனநாயகம், அரசியல் சட்டம், மதசார்பின்மையை மதிக்கும் பிரதமர் நமக்கு வேண்டும். தமிழகத்தின் மீது உண்மையான பாசம் கொண்டவராக இருக்க வேண்டும். மிரட்டுகிறார்
தற்போதைய பிரதமர் மோடி தமிழகத்திற்கு, 10 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் செய்து கொடுக்காதவர். வெள்ள பாதிப்பிற்கு வராமல் இன்று ஓட்டு கேட்டு தமிழகத்திற்கு வந்துள்ளார். எந்த முகத்துடன் இங்கு வருகிறார். பா.ஜ., ஆட்சியில் இல்லாத கேரளா, கர்நாடகா, டில்லி, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை குறிவைத்து வஞ்சித்து வருகிறார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., கவர்னர்களை வைத்து மிரட்டுகிறார்.பெண் சக்தி, பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசும் மோடி, பா.ஜ., - எம்.பி. பிரிஜ் பூஷனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனையர் கண்ணீர் விட்டபோது வாய் திறக்கவில்லை. மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தையும் மவுனமாக தான் மோடி வேடிக்கை பார்த்தார்.இப்படிப்பட்ட காட்டாட்சி தான், பா.ஜ., ஆட்சி. நாட்டில் மதவெறியை விதைத்து பிளவுபடுத்துகிறார். அவரை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.தமிழகத்திற்கான திட்டங்களை நாங்கள் தடுத்தோம் என, பெரிய பொய் சொல்கிறார். சேது சமுத்திரதிட்டம் முடக்கம், மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட பா.ஜ., தடுத்த வளர்ச்சி திட்டங்களை பட்டியலிடலாம். தற்போது ஒரு ரூபாய் வரிக்கு, 29 பைசா திருப்பிக் கொடுத்து நிதி நெருக்கடியை பா.ஜ., உருவாக்குகிறது. பேரிடர் நிதியை கூட கொடுக்காமல் நாங்கள் மக்களுக்கு கொடுத்த நிதிக்கு கூட, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை 'பிச்சை' என சொல்லி ஏளனம் பேச வைக்கிறது மத்திய அரசு. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 70,000 கோடி ரூபாய்க்கு மேல் கல்விக் கடன்கள் வழங்கப்பட்டன. மேலும், 65,000 கோடிக்கு விவசாயக் கடன் தள்ளுபடி, 56,644 கோடியில் மேம்பாலங்கள்,நெசவுத் தொழிலுக்கு இருந்த 'சென்வாட்' வரி நீக்கம் என பெரிய பட்டியலே உள்ளது. மோடியால் இப்படி நிறைவேற்றிய திட்டங்களை சொல்ல முடியுமா?தேர்தல் சீசனுக்கு மட்டும் அவர் வருவதற்கு தமிழகம் பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மீது அவருக்கு ஏன் இத்தனை வன்மம்? நாங்கள் இரண்டாம் தரக் குடிமக்களா? உங்களால் எப்படி ஓட்டு கேட்டு வர முடிகிறது?மதுரையில் கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கு, சிவகங்கையில் நாகரிகத்தின் தொட்டிலாக இருக்கும் கீழடி உள்ளிட்ட திட்டங்களை நிதி நெருக்கடியிலும் செய்துள்ளோம்.மக்களை பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் மதவாதத்திற்கு தான் நாங்கள் எதிரி. மதத்திற்கு எதிரிகள் அல்ல. நான் முதல்வராக பொறுப்பேற்ற பின் ஹிந்து சமய அறநிலையத்துறை விழாக்களில் தான் அதிகம் பங்கேற்றேன். நாட்டை மீண்டும் வளர்ச்சி பாதையில் நடைபோட, பல்வேறு வாக்குறுதிகள் காங்., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அதில், தி.மு.க., கூறிய வாக்குறுதிகளும் எதிரொலித்துள்ளது. ஆனால், தி.மு.க., இமேஜை பாதிக்கும் வகையில் வடமாநிலங்களில் பா.ஜ., பிரசாரம் செய்கிறது. விதண்டாவாதம்
தமிழகத்திற்கு வந்தால் வணக்கம். எனக்கு இட்லி, பொங்கல் பிடிக்கும். தமிழ் பிடிக்கும் எனக்கூறி தமிழுக்கு மோடி துரோகம் செய்கிறார். கவர்னர் ரவியை வைத்து கால்டுவெல், ஜி.யு.போப்பை விமர்சித்து தமிழகத்தில் விதண்டாவாதம் பேச வைக்கிறார். தமிழக விரோத செயல்களை செய்துவிட்டு வாயால் வடை சுடுகிறார். தமிழகத்திற்கு பா.ஜ., இழைத்த அத்தனை துரோகங்களுக்கும் துணையாக இருந்தவர் பழனிசாமி.பா.ஜ., வின் 'பி' டீம் ஆக இருந்து ஓட்டுக்களை பிரிக்கிறார். துரோகத்தின் உருவம், முதுகெலும்பு இல்லாதவர். பதவியை பெற்று சசிகலா, தினகரன், பன்னீர்செல்வத்துக்கு துரோகம் செய்தவர். பா.ஜ.வுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளார். அவர் தமிழகத்திற்கு மட்டுமல்ல நாட்டுக்கே எதிரி. அ.தி.மு.க.,வையும், தமிழகத்தை வஞ்சிக்கும் பா.ஜ.,வையும் இத்தேர்தலில் வீழ்த்த வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.