| ADDED : ஜூலை 08, 2024 12:24 AM
பேரையூர் : பேரையூர் பகுதியில் சோளம் விளைச்சலும், விலையும் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பேரையூர், சின்னகட்டளை, சின்னப்பூலாம்பட்டி, சேடப்பட்டி, அத்திபட்டி, சாப்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த தை மாதம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சோளம் பயிரிட்டனர். தற்போது அறுவடை நடந்து வருகிறது. இந்தாண்டு விளைச்சல் மட்டுமின்றி விலையும் அதிகரித்து உள்ளது.விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்தது. விலையும் குவிண்டால் (100 கிலோ) 4 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. குவிண்டால் ரூ.5500க்கு கொள்முதல் செய்யப்படுவதால் நல்ல விலை கிடைத்துள்ளது. தை மாதம் முதல் போதிய அளவு மழை பெய்ததால் சோளம் நல்ல விளைச்சலை கண்டுள்ளது. பல ஆண்டுகளாக போதிய மழையின்றி நஷ்டத்தை சந்தித்து வந்த விவசாயிகளுக்கு தற்போது விளைச்சல் அதிகரித்து விலையும் கிடைத்ததால் விவசாயத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றனர்.