| ADDED : ஜூன் 28, 2024 12:33 AM
மதுரை: பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்க்கும் தினக்கூலி பணியாளர்கள் நிரந்தர பணியிடத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.அவர்கள் கூறியதாவது: 1998ல் 750 பேரும் 2007 - 08ல் 750 பேரும் தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்டோம். கண்மாயில் மடை திறப்பது, வாய்க்கால்களை சுத்தம் செய்வது, அலுவலக தோட்ட பராமரிப்பு, துாய்மை பணி மற்றும் களப்பணிகளை தற்காலிக பணியாளர்களாக (என்.எம்.ஆர்.) செய்து வருகிறோம். 2008ல் எங்களது சர்வீஸ் பதிவேடுகள் கணக்கில் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது வரை பணிநிரந்தரம் செய்யவில்லை. எந்த சலுகையோ, பலனோ கிடைக்காமல் வெறும் கையுடன் வேலையில் இருந்து ஓய்வு பெறுகிறோம்.ஆற்றில் தண்ணீர் வரும் போது இரவு, பகல் பாராமல் வேலை செய்தாலும் எங்களுக்கு இதுவரை இன்சூரன்ஸ் கூட செய்யவில்லை. வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் காலிப்பணியிடத்தில் புதிய ஆட்களை நியமிக்கவும் இல்லை. இதனால் குறைந்த சம்பளத்தில் கூடுதல் வேலையால் சிரமத்திற்கு ஆளாகிறோம். 2008 பணி பதிவேட்டின் படி எங்களை பணி நிரந்தரம் செய்ய அரசு உதவ வேண்டும் என்றனர்.