டெங்கு தடுப்பு: மாநகராட்சி தீவிரம்
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மேயர் இந்திராணி பொன்வசந்த் வலியுறுத்தினார்.அவர் தெரிவித்துள்ளதாவது: மாநகராட்சி பகுதியில் மே முதல் ஆகஸ்ட் வரை 15 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். கடந்தாண்டை விட தொற்று குறைந்துள்ளது. டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து வார்டுகளிலும் நகர்நல அலுவலர் தலைமையில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 530 பணியாளர்கள் வீடுதோறும் சென்று கொசுப்புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.டெங்கு பாதிப்பு பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. குடிநீர் வழங்கும் மேல்நிலை தொட்டிகளில் பொறியியல் பிரிவினர் 15 நாட்களுக்கு ஒருமுறை குளோரினேஷன் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களும் வீடுகளுக்கு முன் தண்ணீர் தேங்கவிடாமலும், தேவையற்ற பொருட்களை குவித்து வைக்காமலும் இருந்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.