| ADDED : மே 16, 2024 05:37 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் நெல், சோளம், குறுந்தானியங்கள் கடந்தாண்டு ஏப்ரலுடன் ஒப்பிடும் போது இந்த ஏப்ரலில் இருமடங்கு பரப்பளவு அதிகரித்துள்ளது என்கிறார் வேளாண் துறை துணை இயக்குநர் அமுதன்.அவர் கூறியதாவது: 2022 - 23க்கான ஏப்ரலில் நெல் 528 எக்டேர்பரப்பளவில் சாகுபடியானது. இந்த ஏப்ரலில் 966 எக்டேராக அதிகரித்தது. கடந்தாண்டில் 100 எக்டேராக இருந்த சோளம் தற்போது 300 எக்டேராகவும் 16 எக்டேர் உளுந்து பரப்பு 102 எக்டேராக அதிகரித்துள்ளது. 8 எக்டேரில் பயிரான நிலக்கடலை 79 எக்டேராகவும் 30 எக்டேரில் பயிரான எள் 103 எக்டேர் பரப்பளவுக்கு அதிகரித்தது.தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், கலைஞரின் ஒருங்கிணைந்த கிராமப்புற வேளாண் வளர்ச்சி திட்டங்களின் மூலம் மானியத்தில் தரிசு நிலங்கள் உழவு செய்யப்பட்டுள்ளன. தரிசு நிலத்தை சீர்படுத்தி மானியத்தில் விதைகள் வழங்கப்பட்டதால் பயிர் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு மழை குறைந்த நிலையில் காரீப் (ஏப்.,-செப்.,) பருவத்தில் 2295 எக்டேர் நெல், 21 ஆயிரத்து 220 எக்டேர் குறுந்தானியங்கள், 4573 எக்டேர் பயறு வகைகள், 1236 எக்டேர் எண்ணெய் வித்துகள், 3847 எக்டேர் பருத்தி, 1628 எக்டேரில் கரும்பு சாகுபடியானது. தென்மேற்கு பருவமழை மே 19ல் ஆரம்பமாகும் எனவும் 105 சதவீதஅளவு கிடைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால்இந்த சீசனில் சாகுபடி பரப்பு அதிகரிக்கும். விவசாயிகள் மண் பரிசோதனை செய்து நிலத்தை உழுது சமச்சீர் அடிப்படையில் உரமிட்டால் விளைச்சல் அதிகரிக்கும் என்றார்.