| ADDED : ஜூலை 05, 2024 05:06 AM
மதுரை: நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் உள்ள கண்மாய்களில் விவசாய, மண்பாண்டத் தேவைக்கு மேலே எல்லை தாண்டி மண் அள்ளாமல் கண்காணிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரையில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் உள்ள 787 கண்மாய்களில் விவசாயிகள், மண்பாண்டம் செய்வோர் வண்டல் மண், மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நஞ்சை நிலத்திற்கு ஏக்கருக்கு 75 கனமீட்டர், எக்டேருக்கு 185 கனமீட்டர் என்ற அளவில் அள்ளலாம்.புஞ்சை நிலத்திற்கு ஏக்கருக்கு 90 கனமீட்டர், எக்டேருக்கு 222 கனமீட்டர் அளவிலும், மண்பாண்டத் தொழில் செய்வோர் 60 கனமீட்டர் அளவிலும் மண், வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. விவசாயிகள் என்ற போர்வையில் மற்றவர்கள் மண் அள்ளி விற்காமல் தடுக்க கமிட்டி அமைக்க வேண்டும் என வைகை - திருமங்கலம் பிரதான பாசன கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ராமன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:கண்மாய் மடையில் இருந்து 20 அடி துாரம் தள்ளி மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். கண்மாய் உள்வாய் பகுதியான தண்ணீர் வரும் பகுதியில் செம்மண் படிந்திருந்திருக்கும். அதை வெட்டி எடுத்தால் ஆளுயர பள்ளம் உருவாகும். மண்ணை அள்ளிய பின் அந்த பள்ளத்தைத் தாண்டி தண்ணீர் பாசன கால்வாய்க்கு கிடைக்காது. தென்பழஞ்சி, வடபழஞ்சி, தனக்கன்குளம், சாக்கிலியபட்டி, கிண்ணிமங்கலம், சொரிக்காம்பட்டி, கீழ, மேல உரப்பனுார் கண்மாய்களில் இதற்கு முன் மண்ணை (கிராவல்) அள்ளிய பள்ளங்களால் மடை பகுதிக்கு தண்ணீர் போய் சேரவில்லை.இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை விவசாயிகளுக்கு அனுமதி என்பதால் கடந்தாண்டு மண் அள்ளிய விவசாயிக்கு இந்தாண்டு அனுமதி வழங்கக் கூடாது. நீர்வளத்துறை அதிகாரிகள், நீர்ப்பாசன விவசாய பிரதிநிதிகள், பாசன பகிர்மான குழுக்கள், வருவாய்த்துறையினர் இணைந்து கமிட்டி அமைக்க வேண்டும். அந்த கமிட்டி மூலம் கூடுதலாகவும், பாசனத்தை பாதிக்காத வகையில் மண் அள்ளுவதை கண்காணித்து கலெக்டரிடம் புகார் செய்ய வேண்டும். உடனடியாக கமிட்டி அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.