| ADDED : ஏப் 20, 2024 05:40 AM
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதிகளில் பலருக்கு வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அவர்கள் ஓட்டளிக்காமல் திரும்பிச் சென்றனர்.நகரில் 58வது வார்டு ஆரப்பாளையம் ஆனந்த் நினைவு மெட்ரிக் பள்ளி, 77வது வார்டில் சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்தவர்களில் பலருக்கு வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லை, பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் சரிசெய்யும் பணி நடந்தபோது ஓட்டுச்சாவடி அலுவலர்கள் (பி.எல்.ஓ.,) பலர் பணியை சரியாக செய்யவில்லை. பெயர் நீக்கம், மாற்றம் செய்ய வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வாக்காளர் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒப்புதல் இல்லாமலே பல மாற்றங்கள், நீக்கங்கள் நடந்துள்ளன.பலர் இடமாறி சென்றுவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேல் சொந்த வீடுகளில் குடியிருந்து வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு 'ஷிப்டடு' என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறந்தவர்கள் பலரின் பெயர் இன்னும் பட்டியலில் உள்ளது. அதுபோல் வீடுகளில் ஓட்டளிக்கும் வகையில் 85 வயதுக்கு மேற்பட்டோர் விவரம் முழுமையாக சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஓட்டுப்பதிவின்போது பலர் ஓட்டுச்சாவடிக்கு நடக்கமுடியாத நிலையிலும் வந்ததை காண முடிந்தது. பி.எல்.ஓ.,க்களின் அஜாக்கிரதையால் இதுபோன்ற குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன. கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பெயர்கள் கூட நீக்கப்பட்டுள்ளன. ஜனநாயக கடமையாற்ற முடியாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.