உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நியோமேக்ஸ் ரூ.350 கோடி மோசடி உயர்நீதிமன்றத்தில் தகவல்

நியோமேக்ஸ் ரூ.350 கோடி மோசடி உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை, : 'நியோமேக்ஸ் நிறுவனம் ரூ.350 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளது. தற்போது வரை மேலும் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன,' என, அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்தது.சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி ரொபாக்கோ பிராபர்டீஸ் முதலீட்டாளர்கள் நலச்சங்க தலைவர் நடராஜன் தாக்கல் செய்த மனு:மதுரையை தலைமையிடமாக கொண்டது நியோமேக்ஸ் நிறுவனம். பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி, குறைந்த விலையில் வீட்டு மனைகள் வழங்கப்படும் என்றனர். சிலருக்கு வீட்டு மனைகள் பதிவு செய்து கொடுத்தனர். அந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.அதன் துணை நிறுவனமான ரொபாக்கோ சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டது. அதன் நிர்வாகிகள் சிலர் ஆசைவார்த்தை கூறியதை நம்பி சங்க உறுப்பினர்கள் உட்பட இதரர் ரூ.35 கோடிக்கு முதலீடு செய்தனர். வீட்டு மனையை பதிவு செய்து தரவில்லை. பணத்தை திரும்பத்தரவில்லை. சொத்துக்களை ஜப்தி செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. நிறுவனத்தினர் சொத்துக்களை விற்பனை செய்து வருகின்றனர்.நியோமேக்ஸ் அதன் துணை நிறுவனங்களின் நிர்வாகிகள், உறவினர்களின் பெயர்களில் வாங்கிய சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும். அவற்றை விற்பனை செய்து பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கக்கோரி உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நியோமேக்ஸ் வழக்கில் தொடர்புடைய சிலருக்கு மதுரை டான்பிட் நீதிமன்றம் ஜாமின் அனுமதித்தது. அதை ரத்து செய்யக் கோரி பாதிக்கப்பட்டோர் தரப்பில் மனு தாக்கலானது.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.அரசு தரப்பு: இதுவரை 5000 க்கும் மேற்பட்டோர் புகார்கள் அளித்துள்ளனர். இதன்படி ரூ.350 கோடிக்கு மோசடி நடந்துள்ளது. நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போதுவரை புகார்கள் வருகின்றன. புகார்கள் பெறுவது முழுமையடைந்தால்தான் அடுத்தகட்ட விசாரணைக்கு செல்ல முடியும். இவ்வாறு கூறி அறிக்கை தாக்கல் செய்தது.நீதிபதி: பொருளாதார மோசடிகள் தொடர்பாக எவ்வளவு வழக்குகள் பதியப்பட்டுள்ளன, குற்றப்பத்திரிக்கை எத்தனை வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, எவ்வளவு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, பாதிக்கப்பட்டோருக்கு எவ்வளவு தொகை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது போன்ற விபரங்கள் தேவை. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி ஜூலை 3 க்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை