| ADDED : மே 06, 2024 01:11 AM
திருமங்கலம் : திருமங்கலம் சோணை மீனா நகரை சேர்ந்தவர் சதாசிவம் 71, நேற்று காலை 11:00 மணிக்கு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து வீட்டிற்கு செல்ல டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) சென்றார். தேவர் சிலை அருகே செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கியவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அதேநேரம் ராஜபாளையத்தில் இருந்து மதுரை சென்ற தனியார் பஸ் அவர் மீது ஏறி இறங்கியதில் காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். திருமங்கலம் நகர் போலீசார் பஸ் டிரைவர் சுந்தரமூர்த்தியிடம் விசாரிக்கின்றனர். நெரிசலுக்கு தீர்வு கிடையாதா
திருமங்கலம் - மதுரை ரோட்டில் எந்நேரமும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. வாகனங்கள் நடுரோட்டில் பார்க்கிங் செய்யப்படுவதே இதற்கு காரணம். வாகனங்களில் பொருட்களை விற்பனை செய்வோர் நடுரோட்டிலேயே வியாபாரம் செய்கின்றனர். இதனால் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் உயிர் பயத்துடன் செல்கின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழ் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது.போலீசாரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.சம்பந்தமே இன்றி போக்குவரத்து நெரிசலால் ஒருவர் பலியானது வேதனைக்குரியது. இதுகுறித்து நகராட்சியும், போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்காவிடில் இந்த சோகம் தொடர்வதை தவிர்க்க முடியாது.