| ADDED : ஆக 09, 2024 01:17 AM
ஊமச்சிகுளம் : மதுரை மேற்கு ஒன்றியம் செட்டிகுளத்தில் வீட்டு வாசல், காலி மனைகளில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.இப்பகுதியில் உள்ள திருமால்புரம், மங்கல விநாயகர் நகரில் 2 ஆண்டுகளாக ரோடு வசதி இல்லாமல் இருந்தது. ரோடு பணிகளுடன், கழிவுநீர் வடிகால்கள் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. பிப்ரவரியில் புதிய தார் ரோடு அமைத்தனர். ஆனால் கழிவுநீர் பிரச்னைக்கு 2 ஆண்டாக தீர்வு கிடைக்கவில்லை. எனவே அதனை அப்புறப்படுத்த முடியாமல் மக்கள் பரிதவிப்பில் உள்ளனர். பெரும்பாலான வீடுகளில் கழிவுநீரை வீட்டு வாசல் பகுதியிலும், செப்டிக் டாங்க் கழிவுகளை காலி மனைகளிலும் விட்டுள்ளனர்.இதனால் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. நிலத்தடி நீர் மாசடைகிறது. டெங்கு, காலரா போன்ற நோய் தொற்ற வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மங்கல விநாயகர் தெருவில் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளால் நீரோட்டம் தடைபடுகிறது. துர்நாற்றம் வீசுவதால் மக்கள் முகம் சுளிக்கின்றனர்.செட்டிகுளம் ஊராட்சி தலைவி பூங்கோதை கூறியதாவது: இப்பகுதியில் ரூ.27.50 லட்சம் செலவில் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. விடுபட்ட இடங்களில் பொறியாளர்கள் அளவீடு செய்துள்ளனர். விரைவில் ரோடு பணிகள் முழுமை பெறும். சாக்கடை பிரச்னையை தீர்க்க புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும். அரசு நிதி ஒதுக்கியதும் பணிகள் துவங்கும்.கால்வாயில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படும். துப்புரவு பணியாளர்கள் வீடுவீடாக குப்பையை வாங்கி ஊருக்கு வெளியே காலி இடத்தில் கொட்டுகின்றனர். அதேசமயம் வெளியாட்கள் சிலர் டூவீலரில் வந்து கழிவுகளை பிளாஸ்டிக் கவரில் கட்டி வீசிச் செல்கின்றனர். அதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.