மேலும் செய்திகள்
நெல்லைக்கு சிறப்பு ரயில்
11 hour(s) ago
ரயில்வே ஆலோசனை குழுவுக்கு கவுரவ ஊதியம்
11 hour(s) ago
மதுரை : மதுரை கப்பலுார் டோல்கேட் பிரச்னை தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் உள்ளூர் வாகனங்கள் 2020க்கு முன்பிருந்தபடி கட்டணமின்றி செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் டோல்கேட்டை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என எதிர்ப்புக்குழு தெரிவித்துள்ளது.கப்பலுாரில் டோல்கேட் விதிமுறைப்படி அமையவில்லை என அருகில் உள்ள திருமங்கலம் பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 2021ல் டோல்கேட் நிர்வாகம் தனியார் நிறுவன கைக்கு வந்த பின் கட்டணம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது தொடர்ந்தது.ஜூலை 10 முதல் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீத கட்டணம் உண்டு என டோல்கேட் நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து டோல்கேட் பகுதியில் ஒரு நாள் முழுவதும் மறியல் நடந்தது. மறுநாள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், பழைய நிலை தொடரும் என்றனர். இந்நிலையில் இன்று (ஜூலை 30) எதிர்ப்பு குழுவினர் கடையடைப்பு போராட்ட அறிவிப்பு செய்தனர். எனவே, அமைச்சர் மூர்த்தி தலைமையில் மீண்டும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடந்தது.இதில் கலெக்டர் சங்கீதா, போலீஸ் எஸ்.பி., அரவிந்த், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மணிமாறன், டோல்கேட் எதிர்ப்புக்குழு நிர்வாகிகள் கண்ணன், ரகுபதிராஜா உட்பட பலர் பங்கேற்றனர். அமைச்சர் மூர்த்தி கூறுகையில், ''உள்ளூர் வாகனங்களை அனுமதிப்பதில் 2020ம் ஆண்டு நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்படும். ஆதார் அடிப்படையில் அந்த வாகனங்கள் தனிவழியில் அனுமதிக்கப்படும்'' என்றார்.எதிர்ப்பு குழுவினர், ''2020 ல் எந்தமாதிரி கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டது என்பதற்கான ஆவணமும் இல்லாததால், அதை நடைமுறைப்படுத்துவதில் பிரச்னை உருவாகும். இப்பிரச்னையில் நிரந்தர தீர்வு வேண்டும்'' என்றனர்.அமைச்சர் கூறுகையில், ''நிரந்தர தீர்வு பெற உச்சநீதிமன்றத்தில்தான் தீர்ப்பு பெற வேணடும்'' என்றார். இதனால் முடிவு எட்டப்படாத நிலையில் எதிர்ப்பு குழுவினரில் சிலர் அதிருப்தி அடைந்தனர்.இதனையடுத்து அமைச்சர் கூறுகையில், ''வாகனங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய தேசிய நெடுஞ்சாலைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கட்டண விலக்கு குறித்து தலைமைச் செயலாளருடன், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்'' என்றார்.எதிர்ப்பு குழுவினர் கூறுகையில், ''டோல்கேட்டை அகற்ற வேண்டும். அதுபற்றி யாரும் பேசவில்லை. 2020 ம் ஆண்டு நடைமுறைப்படி வாகனங்கள் செல்ல எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து எழுத்துபூர்வமாக அறிவிக்க வேண்டும். இதில் திருநகர் முதல் கள்ளிக்குடி வரையில் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படும் என இருந்தது. இந்நிலை தொடர வேண்டும். இதுதொடர்பாக எஸ்.பி.,யிடம் பேச உள்ளோம்'' என்றனர்.இந்தப் பேச்சு வார்த்தையிலும் ஒருமித்த முடிவுக்கு வராத நிலையில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என எதிர்ப்பு குழுவினர் தெரிவித்தனர்.
11 hour(s) ago
11 hour(s) ago