உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு, உதவி பெறும் பள்ளிகளில் நடக்கும் ஆண்டாய்வு அல்லோகலப்படுது...; அதிகாரிகளை கவனிக்க நடக்கும் வசூலால் அதிருப்தி

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் நடக்கும் ஆண்டாய்வு அல்லோகலப்படுது...; அதிகாரிகளை கவனிக்க நடக்கும் வசூலால் அதிருப்தி

மதுரை : மதுரையில் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் நடக்கும் அதிகாரிகளின் ஆண்டாய்வுகள் கண்துடைப்பாக நடப்பதாகவும், அதிகாரிகளை கவனிக்க ஆசிரியர்களிடம் கட்டாய வசூல் நடத்துவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.தொடக்க, நடுநிலை பள்ளிகளை வட்டாரக்கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,), உயர்நிலை பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,), மேல்நிலை பள்ளிகளில் சி.இ.ஓ., அந்தஸ்தில் ஆண்டாய்வுகள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளி செயல்பாடுகளை மேம்படுத்துவது, நலத்திட்டங்கள் விவரம், ஆசிரியர்களின் திறன்களை சோதிப்பது உட்பட கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள் இந்த ஆண்டாய்வில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் இது கண்துடைப்பாகவும், விதிமீறியும் நடப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.அவர்கள் கூறியதாவது: அதிகாரிகளின் ஆண்டாய்வு என்பது காலை இறைவணக்கம் முதல் பள்ளி முடியும் வரை முழு நாளும் இருந்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் தற்போது ஆண்டாய்வுகளின் நோக்கம் திசை மாறுகிறது. குறிப்பாக ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் அவர்களுக்கு வசதியான நேரம் பள்ளிக்கு வருகின்றனர். அவர்களுக்கு வீட்டுக்கு வரும் விருந்தாளி போல் சிக்கன், மட்டன் பிரியாணி என தடபுடல் விருந்து அளித்து 'கவனிக்க' வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. ஒருசில அதிகாரிகள் இதில் விதிவிலக்காக உள்ளது பாராட்டத்தக்கது.சில அதிகாரிகள் தங்களுக்கு கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்ய வைக்கின்றனர். பள்ளி முடியும் நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து இரவு 7:00 மணிக்கும் மேலாகவும் ஆய்வை தொடர்கின்றனர். இதனால் ஆசிரியைகள் பாடு திண்டாட்டமாக உள்ளது. ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள பள்ளிகளில் ஆய்வு அதிகாரிகளுடன் வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஆய்வு முடிந்து அதிகாரிகளை நன்கு 'கவனிப்பது' முதல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான ஏற்பாடு செய்வது வரை ஆகும் செலவுகள் அனைத்தும் அந்தப்பள்ளி ஆசிரியர்கள் தலையில்தான் விழுகிறது. எனவே ஆண்டாய்வுகள் மீதான கண்காணிப்பை கல்வித்துறை மேம்படுத்த வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி