பாண்டிகோயில் நெரிசலுக்கு என்னதான் தீர்வு
மதுரை : மதுரை ரிங்ரோடு பாண்டிகோயில் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், தென்மாவட்ட பஸ்களை மேலமடை சந்திப்பு வழியாக திருப்பி விடுவதால் அங்கும் நெரிசல் அதிகமாகிறது.மதுரையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கப்பலுார் - மாட்டுத்தாவணி இடையே 27 கி.மீ.,க்கு ரிங்ரோடு அமைக்கப்பட்டது. இந்த ரோட்டில் பாண்டிகோயில் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விசேஷ தினங்கள், சனி, ஞாயிறு நாட்களில் காலை முதலே இங்கு நேர்த்திக் கடனுக்காக வருவோர் பலர் கிடா வெட்டி வழிபாடு நடத்துகின்றனர். இதற்காக வரும் பக்தர்களின் வாகனங்கள் அதிகளவில் ரோட்டில் நிற்கின்றன. மேலமடையில் அதிகரிக்கும் நெரிசல்
மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லும் பஸ்கள் இவ்வழியில் செல்ல முடியாமல் தவிக்கின்றன. இதனால் சமீப நாட்களாக இந்த வாகனங்களை சென்ட்ரல் மார்க்கெட், கே.கே.நகர், மேலமடை சந்திப்பு, அண்ணாநகர், தெப்பக்குளம் வழியாக ரிங்ரோடுக்கு திருப்பி விடுகின்றனர். ஏற்கனவே மேலமடை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி நடப்பதால், இங்கு நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த சந்திப்பில் தென்மாவட்ட பஸ்களும் சென்று, வருவதால் நெரிசல் மேலும் அதிகரிக்கிறது.ரிங்ரோடு, சிவகங்கை ரோடு சந்திப்பில் சென்னை செல்லும் ரோட்டில் மேம்பாலம் உள்ளது. இந்த ரோட்டில் குறைந்தளவிலேயே வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டை சிவகங்கை ரோட்டில் கிழக்கு மேற்காக அமைத்திருந்தால் இங்கு நெரிசல் குறைந்திருக்கும்.அல்லது மேம்பாலத்தில் ஒரு பிரிவை பாண்டிகோயில் ரிங்ரோடு பகுதியில் இறங்கும் வகையில் அமைத்திருந்தாலும் தென்மாவட்ட வாகனங்கள் எளிதாக சென்று வர வழிகிடைத்திருக்கும். இந்த யோசனைகள் மேம்பாலம் கட்டும்போதே புறக்கணிக்கப்பட்டுள்ளன.தற்போது மாட்டுத்தாவணி வாகனங்களை இலந்தைக்குளம் டைடல் பார்க் அருகே ரோடு அமைத்து சென்னை நான்கு வழிச்சாலையில் சந்திக்கும் வகையில் செயல்படுத்தினால் பாண்டிகோயில் பகுதியில் நெரிசல் குறையலாம். மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறையினர் இதுகுறித்து பரிசீலிக்கலாம்.