| ADDED : மே 05, 2024 03:44 AM
மதுரை : மதுரை கூடல்நகர் ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகளின்றி பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கூடல்நகர் பகுதி சரக்கு முனையமாக உள்ளது. அதை பயணியர் முனையமாகவும் மாற்ற வேண்டும் மதுரை ரயில்வே ஸ்டேஷனில் புனரமைப்பு பணிக்காக கூடல்நகரில் இருந்து சில ரயில்கள் தற்காலிகமாக இயக்கப்பட்டன. அப்போது அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இடநெருக்கடியால் சிக்னல் கிடைக்காமல் மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் ரயில்களில் சில கூடல்நகரில் நிறுத்தப்படுகின்றன. வரும்காலங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்போது இந்த ஸ்டேஷன் அதிக பயணிகளை கையாளும் முனையமாக மாற வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆனையூர், தத்தனேரி, சிக்கந்தர் சாவடி, எஸ்.ஆலங்குளம், தபால்தந்தி நகர், பி.பி.குளம், செல்லுார் பகுதி மக்கள் அதிகம் பயனடைவர். அதற்கேற்ப கூடல்நகர் ஸ்டேஷனையும், பயணிகள் வரும் பாதைகளையும் சீரமைப்பது காலத்தின் கட்டாயம். பயணிகள் கூறியதாவது:கூடல்நகர் ரயில்வே ஸ்டேஷனில் மதுரை - திண்டுக்கல் - மதுரை, மதுரை - கோவை - மதுரை, சென்னை எழும்பூர் - குருவாயூர் என ஐந்து ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. மதுரை வடக்குப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் இருந்து மதுரை வரும் ரயில்கள் இங்கு நிற்க வேண்டும். எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. போக்குவரத்து வசதி, ரோடு வசதி, அறிவிப்புப் பலகைகள், சிற்றுண்டி கடைகள், கழிப்பறை வசதி இல்லை.மாற்றுத்திறனாளி கழிப்பறையை பூட்டி வைத்துஉள்ளனர். குடிநீர் குழாய்கள் உள்ளன; ஆனால் நட்டு போட்டு வைத்துள்ளனர். நடைமேடைகளில் பல பகுதிகளில் மேற்கூரை இல்லாமல் வெயிலில் காத்துக்கிடக்க வேண்டியள்ளது. நடைமேம்பால படிகட்டுகள் விரிசலுடன் ஆபத்தான நிலையில் உள்ளன. அமரும் இருக்கைகள், பெயர் பலகைகள், சுற்றுச்சுவர்கள் உடைந்து காணப்படுகின்றன. ரயில்வே ஸ்டேஷனை சுற்றி கருவேல மரங்கள் சூழ்ந்து புதர் மண்டிக்கிடப்பதால் இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள், ரயில்வே போலீசார் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்றனர்.