உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மியாவாக்கி முறையில் நடப்பட்ட 10 ஆயிரம் மரக்கன்றுகள்

மியாவாக்கி முறையில் நடப்பட்ட 10 ஆயிரம் மரக்கன்றுகள்

புதுார் : மதுரை புதுார் சூர்யா நகர் அருகே கொடிக்குளம் கண்மாயையொட்டிபார்வை பவுண்டேஷன் இளம் மக்கள் இயக்கம் சார்பில் 2 ஏக்கர் பரப்பளவில் 'மியாவாக்கி' முறையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.கவுன்சிலர் முத்துக்குமாரி, ரோட்டரி சேர்மன் சசிபாம்ரா, சமூக ஆர்வலர் அசோக்குமார், லதா மாதவன் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் முருகன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட என்.சி.சி., மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். இயக்கத்தின் நிறுவனர் சோழன் குபேந்திரன் தனது ஒரு லட்சமாவது மரக்கன்றை நட்டார். அவர் கூறியதாவது: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வார்த்தையால் 12 ஆண்டுகளாக மதுரை முழுவதும் மரக்கன்று நடுகிறேன். ஒரு கோடி மரங்கள் நட வேண்டும் என்பதே இலக்கு. 'மியாவாக்கி' என்பது ஜப்பானிய முறையில் குறைந்த பரப்பளவில் வளர்க்கப்படும் காடுகள். காடுகளின் பரப்பளவு குன்றிய மாவட்டமாக மதுரை உள்ளது. எனவே மியாவாக்கி முறையில் அதிக காடுகளை வளர்க்க வேண்டும். கொடிக்குளம் கண்மாயை தேர்ந்தெடுக்க காரணம் பறவைகளுக்கான உறைவிடத்தை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய சூழலில் தான் லட்சக்கணக்கான பறவைகள் தங்கும். பறவைகளே காடுகளை உருவாக்கும். ஆந்திராவின் ராஜமுந்திரியில் இருந்து பெறப்பட்ட வேம்பு, புங்கை, வாகை, பூவரசு, மயிலம், மருதம், இலுப்பை, கடம்பம் உள்ளிட்ட 15 வகை நாட்டு ரக மரக்கன்றுகளை நடுகிறோம். நாவல், அத்தி, பலா போன்ற பறவைகளுக்கு பலன் தரும் மரங்களும் நடுகிறோம். மண்புழு உரம் உள்ளிட்ட இயற்கை உரங்கள் பயன்படுத்துகிறோம். ஒரு லட்ச மரக்கன்றுகளை 10 ஆண்டுகளில் தனிமனிதனாக நட்டுள்ளேன். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளேன். இதற்காக ஒரு குழு அமைக்க உள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ