நவ.29 கடையடைப்பில் 18 சங்கங்கள் ஜி.எஸ்.டி.,யை நீக்கக்கோரி போராட்டம்
மதுரை : வணிக கட்டடங்களுக்கான ஜி.எஸ்.டி., வரியை நீக்கக்கோரி மதுரையில் 18 சங்கங்களை சேர்ந்த வணிகர்களின் சங்க கூட்டமைப்பு சார்பில் நவ. 29 ல் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.மதுரையில் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயப்பிரகாசம், வேல்சங்கர், திருமுருகன், பழனிசாமி, சாய் சுப்ரமணியன், ரவிச்சந்திரன், பால்ராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.அவர்கள் கூறியதாவது: 'காம்பவுண்டிங்' முறையின் கீழ் வணிகம் செய்யும் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே வியாபாரம் செய்யும் வணிகர்களுக்கு 'ஐ.டி.சி.,' வரி சலுகை இல்லை. கட்டட வாடகைக்கு செலுத்தும் வணிகர்கள் 'காம்பவுண்டிங்' வரி முறையில் இருந்தாலும் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை வியாபாரம் செய்யும் பட்சத்திலும் கட்டட வாடகையை 'ஆர்.சி.எம்.,' முறையில் 18 சதவீத வரியை அந்தந்த மாதங்களில் செலுத்த வேண்டும். இது கூடுதல் சுமையாக உள்ளது. ஒரு வேளை 'ஆர்.சி.எம்.' வாடகை செலுத்தும் பட்சத்தில் அதை கணக்கிட்டு மீதமுள்ள தொகையை வழக்கமான ஐ.டி.சி., முறைப்படி சரிசெய்ய வேண்டும்.எந்த வகையிலும் வியாபாரத்திற்காக ஜி.எஸ்.டி., பதிவு பெறாத இட உரிமையாளரிடம் அவருடைய இடத்தில் வியாபாரம் செய்யும் அனைத்து வணிகர்களுக்கும் இந்த புதிய 'ஆர்.சி.எம்.,' முறைப்படி 18 சதவீத வரி கட்ட வேண்டியது அவசியமாகிறது. இட உரிமையாளர் உறவினராக இருக்கும் பட்சத்தில் வாடகை இல்லாவிட்டாலும் அந்த இடத்திற்கான வாடகையை சந்தை மதிப்பில் கண்டறிந்து அதற்கு 18 சதவீத 'ஆர்.சி.எம்.' செலுத்த சொல்வதை ஏற்கமுடியாது.ரூ.20 லட்சத்திற்கு மேல் யார் வாடகை வாங்குகின்றனரோ அவர்கள் தான் 18 சதவீத வரி கட்ட வேண்டும் என்றுஇருந்தது. இன்றைக்கு சாதாரண வணிக நிறுவனங்கள் தயாரிப்பாளரோ தொழில் செய்பவரோ யாராக இருந்தாலும் ஜி.எஸ்.டி. வரி கட்ட வேண்டும் என கூறப்படுகிறது. சில்லரை வணிகர்கள் அதிகமானோர் ரூ.20 லட்சத்திற்கான 'காம்பவுண்டிங்' முறையிலும் சிலர் ரூ.1.5 கோடிக்கான 'காம்பவுண்டிங்' முறை வரிவிலக்கில் உள்ளனர். இந்த திட்டத்தில் உள்ளவர்கள் ஒரு சதவீத வரி மட்டுமே செலுத்துகின்றனர்.அவர்களும் வாடகைக்கு இருக்கும் நிறுவனங்களில் 18 சதவீத வரி செலுத்த வேண்டும் என்பது ஏற்க முடியாது. குடும்ப உறவுகளிடம் இடம் பெற்று வாடகைக்கு இருந்தாலும் சந்தை மதிப்பை கணக்கிட்டு அதற்கு 18 சதவீத வரி செலுத்த வேண்டும் என்பது நியாயமில்லை.இதனால் பாதிக்கப்படுவது சிறுவணிகர்கள், சிறு தயாரிப்பாளர்கள் தான். மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பது போல சட்டம் மாறிவிட்டது. சாதாரணவணிகர்கள் கூட வரிகட்ட வேண்டும் என்பதை ஏற்க முடியாது.மத்திய, மாநில அரசுகளை குறைசொல்ல தயாராகவில்லை. எல்லா மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்துள்ள ஜி.எஸ்.டி., கவுன்சில் தான் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. அனைத்து மாநில அரசுகளும் இதை வலியுறுத்தி இந்த முறையை நிறுத்த வேண்டும். இதை வலியுறுத்தி நவ. 29 முழுநேர கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றனர்.தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கம், தயாரிப்பாளர்கள் வணிக சங்க கூட்டமைப்பு, எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்து சங்கம், ஸ்டிக்கர்கள், விளம்பரத்தொழில், டைல்ஸ், சானிட்டரிவேர், எலக்ட்ரிக்கல் டீலர்ஸ், ஹார்டுவேர் அண்ட் பெயின்டிங், பைப்ஸ் டிரேடர்ஸ், வெல்லம், சர்க்கரை வெல்லம், பேரீச்சம்பழம், முந்திரிபருப்பு, ஈர இட்லி மாவு வியாபாரிகள் சங்கங்கள், ரெடிமேட் தயாரிப்பாளர் சங்கங்களின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.