| ADDED : ஜன 11, 2024 04:47 AM
மதுரை : தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 22,418 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு 'ஸ்மார்ட் போர்டு', 7985 நடுநிலை பள்ளிகளுக்கு 'ைஹடெக் லேப்' வசதி ஏற்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு தொடக்க பள்ளி களில் தற்போது மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. பாடம் கற்பதுடன் அவற்றை 'கியூ ஆர்' கோடு மூலம் வீடியோவாக பார்வையிடும் தொழில்நுட்பமும் உள்ளது. ஆசிரியர்கள் அலைபேசி, லேப்டாப் மூலம் மாணவர்களுக்கு காண்பித்து வந்தனர். இதனால் ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் சரிவர பார்வையிடாத நிலை இருந்தது. இதனால் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தும் வகையில் 'ஸ்மார்ட் போர்டு' வசதி வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் தொடக்க பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு, நடுநிலை பள்ளிகளுக்கு ைஹடெக் லேப் வசதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது: அனைத்து பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் போர்டு, இணைய வசதி வேண்டும். ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினோம். தற்போது ஸ்மார்ட் போர்டு, நடுநிலை பள்ளிகளுக்கான ஹைடெக் லேப் வசதிகள் கிடைக்க உள்ளது. இதன் மூலம் கிராம மாணவர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட கல்வி கிடைக்கும் என்றார்.