துாய்மைப் பணியாளர் 90 பேர் கைது
மதுரை; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி வளாகத்தில் துாய்மைப்பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சியில் தனியார்மயத்தை புகுத்தும் அரசு உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். துாய்மை பணிக்காக 'அவர் லேண்ட்' என்ற தனியார் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து பிரிவு பணியாளர்களுக்கும் ஒரு மாதம் சம்பளத்தை தீபாவளி போனசாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநகராட்சி தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். எல்.பி.எப்., துாய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த துாய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். துாய்மைப் பணியாளர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து துாய்மைப் பணியாளர்கள் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 90 பேரை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர். மூன்று மாவடியில் உள்ள ஒரு மண்டபத்தில் வைத்துள்ளனர்.