| ADDED : ஜன 17, 2024 07:09 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ள மூன்று அணையா விளக்குகளில் ஏதாவது ஒன்று அணைந்தே கிடக்கிறது. அணையா விளக்கை எரிய வைப்பதற்கு ஊழியர்களுக்கு ஏனோ ஆர்வமில்லாமல் உள்ளது.கோயில் ஆஸ்தான மண்டபம், கம்பத்தடி மண்டபம், திருவாட்சி மண்டபங்களில் 24 மணி நேரமும் சுடர்விடும் வகையில் அணையா விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.திருவாட்சி மண்டபத்திலுள்ள இந்த விளக்கு பல நாட்கள் அணைந்தே கிடக்கிறது. இந்த மூன்று அணையா விளக்குகளும் தொடர்ந்து எரிவதற்கு ஆவன செய்ய வேண்டும் என கோயில் துணை கமிஷனர் சுரேஷ் பலமுறை உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவை செயல்படுத்த ஏனோ ஊழியர்கள் ஒத்துழைப்பதில்லை. பக்தர்கள் வேதனை
பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு கோயிலுக்கு வரும் பொழுது மனநிம்மதி தேடி வருகிறோம். அப்போது விளக்குகள் அணைந்து இருப்பது மனதுக்கு வேதனையாக உள்ளது. சாதாரண நாட்களில் இருப்பதுகூட பரவாயில்லை. செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், திருவிழா காலங்களிலும்கூட எரியாதது வருத்தமாக உள்ளது. வராஹி அம்மன் சிலை அருகே உள்ள அணையா விளக்கு தைப்பொங்கல் அன்று அணைந்தே இருந்தது. இந்த அணையா விளக்குகளுக்கு எப்போதுதான் விமோசனம் கிடைக்கப் போகிறதோ தெரியவில்லை, என்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.