மேலும் செய்திகள்
விபத்தில் இருந்து
02-Jul-2025
திருமங்கலம்: திருமங்கலம் அருகே முன்னால் சென்ற டிராக்டர் மீது ராக்கெட்டுக்கு எரிபொருள் ஏற்றி செல்லும் டேங்கர் லாரி மோதியது. டேங்கர் லாரியில் எரிபொருள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உள்ளது. இங்கு விண்வெளியில் ஏவப்படும் ராக்கெட்டுகளுக்கான பாகங்கள் தயாரிப்பதுடன் ராக்கெட் இன்ஜின் பரிசோதனை மையமும் உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து மகேந்திரகிரி மையத்திற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீண்டும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு நேற்றிரவு திரும்பியது. விருதுநகர் சமயநல்லூர் நான்கு வழிச்சாலையில் திருமங்கலம் பைபாஸில் காட்டு பத்ரகாளியம்மன் கோயில் அருகே நேற்றிரவு 9:30 மணியளவில் விருதுநகரில் இருந்து மதுரைக்கு கான்கிரீட் போட உதவும் சிமெண்ட் கலவை தொட்டியை இழுத்து சென்ற டிராக்டர் மீது டேங்கர் லாரி மோதியது. கலவை தொட்டி டிராக்டரில் இருந்து தனியாக கழன்றது. டேங்கர் லாரி முன்பகுதி சேதமடைந்தது. திருமங்கலம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டனர். அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. நாற்பது நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டேங்கர் லாரி காலியாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
02-Jul-2025