வாகனங்களை நிறுத்துவதால் அதிகரிக்கும் விபத்துக்கள்
மேலுார்; மேலுார் மெயின் ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதால் நடந்து செல்லும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.மேலுார் தாலுகாவில் 84 வருவாய் கிராமங்கள் உள்ளன. இக் கிராமங்களை சேர்ந்த பலஆயிரம் பேர் தினமும் தங்கள் அவசிய, அலுவல் பணிகள் காரணமாக மேலுார் வந்து செல்கின்றனர். இதனால் எந்நேரமும் மக்கள் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது.மேலுார் நகரில் மெயின் ரோட்டில் வியாபாரிகள் கடைகளை ரோடு பகுதியில் 5 அடிக்கு மேல் நீட்டியும், கடைக்கு முன் சில வியாபாரிகள் வாடகைக்கும் விட்டுள்ளனர். நடைபாதையில் கடையின் பெயர் பலகையையும், வாகனங்களையும் நிறுத்தியுள்ளனர். அதனால் நடைபாதையில் நடக்க இயலாத மக்கள் மெயின் ரோடுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.பொது மக்கள் கூறுகையில், ''மெயின் ரோட்டில் வியாபாரிகள், ஷேர் ஆட்டோக்கள் போட்டி போட்டு நிறுத்தி நடைபாதையை ஆக்கிரமிக்கின்றன. நடைபாதையை பயன்படுத்த முடியாமல் மக்கள் நடு ரோட்டில் செல்ல வேண்டியள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. ரோட்டில் வாகனங்களை நிறுத்துவோர் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் கூறுகையில், வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.