உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  காந்தாரா கண்டெடுத்த அய்ரா

 காந்தாரா கண்டெடுத்த அய்ரா

' கா ந்தாரா சாப்டர் 1' திரைப்படம் கன்னட சினிமா உலகில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. படக்குழுவினருக்கு கிடைத்த புகழால் நடிகர், நடிகைகள் என அனைவரும் அடுத்தடுத்த தயாரிப்புகளில் பிசியாகி விட்டனர். அந்தப் படத்தில் முக்கிய காட்சிகளில் தனது அழுத்தமான நடிப்பால் கவனம் பெற்றவர் நடிகை அய்ரா. மும்பையில் படப்பிடிப்பில் இருந்தவரிடம் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து... கர்நாடக மாநிலம் மங்களுர் பட்கலா கிராமம்தான் சொந்த ஊர். சினிமா பற்றி பெரிதாக புரிதல் இல்லாத வெள்ளந்தி மக்கள் மிகுந்த ஊரிலிருந்து சினிமாவுக்கு வந்த முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். அப்பா கிருஷ்ணா, அம்மா பிரபாவதி. மல்டிபிளக்ஸ் வசதிகளுக்கு முந்தைய காலத்தில் தியேட்டர்களில் அப்பா கேண்டீன் நடத்தினார். அப்பாவின் தொழிலை உடனிருந்து கவனிக்க தியேட்டருக்கு சென்றதால் சினிமா மீது பரவசம் ஏற்பட்டது. செலவில்லாமல் சினிமா பார்க்கும் வாய்ப்பும் திறந்தே இருந்ததால் தியேட்டரில்தான் அதிகம் இருப்பேன். அதனால் சினிமா மீது ஈர்ப்பு உண்டானது. கல்லுாரி நாட்களில் முக வசீகரம், தோற்றம் பார்த்தவர்கள் மாடலிங் செய்ய நம்பிக்கை கொடுத்தனர். படித்துக்கொண்டே மாடலிங் செய்தேன். ஐ.டி., நிறுவனத்தில் வேலை ஐ.டி., இன்ஜினியரிங் முடித்து மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். இடையே பெரிய நிறுவனங் களுக்கு விளம்பரத்தில் மாடலாக நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் நாம் என்ன செய்கிறோம்; என்ன விரும்புகிறோம் என சோதித்து பார்க்கும் சுய மதிப்பீட்டுக்கான நேரம் வரும். அந்த சந்தர்ப்பத்தில் சினிமா நடிகையாக வேண்டும் என முடிவோடு முயற்சி செய்தேன். 'நன்னபிரகாரா' எனும் கன்னடப் படத்தில் சிறிய ரோலில் நடிப்பதற்கான முதல் வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்தது. தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'ரெபல்'படத்தில் நடித்தேன். 'நிறும் மாறும் உலகில்' படத்தில் இடம்பெற்ற 'ரங்கம்மா' வைரல் பாடலானது. 2024ல் 'காந்தாரா சாப்டர்-1' படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. முக்கிய வில்லனின் மனைவியாக சிறிய ரோல்தான் என்றாலும் எனக்கான அழுத்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. படத்தின் வெற்றிக்கு பிறகு நிறைய கன்னடப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு 'கமிட்' ஆகியிருக்கிறேன். 6 மொழிகள் தெரியும் நான் சினிமாவில் நடிப்பதற்கு வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இருந்தாலும் சுதந்திரமாக செயல்பட பெற்றோர் இடம் கொடுத்தனர். எனது வாழ்வில் பெற்றோரே எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக பார்க்கிறேன். தற்போது சினிமாவில் நான் அடைந்திருக்கும் வளர்ச்சி, வாய்ப்புகளை எண்ணி அவர்கள் பெருமை கொள்ளும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. துளு, தெலுங்கு, கன்னடம், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என நிறைய மொழிகள் எனக்கு தெரியும் என்பதால் அனைத்து மொழி படங்களிலும் நடிக்க ஆசை உள்ளது. தமிழில் நிறைய படங்களில் நடிக்கவேண்டும். மொழியின் உணர்வுகளை புரிந்து கொண்டால் தடுமாற்றம், செயற்கைத்தனம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்த முடியும். நடிப்பு தவிர நடனம், கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு. என்னை சந்தோஷமாக வைத்திருப்பதை எப்போதும் விரும்புவேன். முடிந்தளவு அன்பு செய்யுங்கள். யார் மீதும் வெறுப்பை பரப்பாதீர்கள் என்பதுதான் நான் சொல்ல விரும்புவது. தமிழில் ரஜினியை மிகவும் பிடிக்கும். அவரின் ஸ்டைல், எளிமை, அணுகுமுறை, தன்னடக்கம், பணிவு என அவரை நேரில் சந்தித்து பேச அவ்வளவு ஆவல் உள்ளது. ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, பிரதீப் ரங்கநாதன் போன்றவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து சினிமாவுக்கு வந்து இன்று மிகப் பெரிய இடத்தை தக்கவைத்திருக்கிறார்கள். சினிமாவில் சாதிக்க நினைப்பவர்களுக்கு இவர்களே உந்து சக்தி. எந்த தொழிலிலும் ஆரம்பத்திலே சிவப்பு கம்பள வரவேற்பு இருக்காது. ஆரம்பக்கால சங்கடங்கள், கஷ்டங்களை அனுபவித்துதான் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர முடியும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ