சிறுதானியங்களில் கோலமிட்டு விழிப்புணர்வு அங்கன்வாடி பணியாளர்கள் அசத்தல்
மதுரை: சமூகநலன், மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 'போஷன் மா' (தேசிய ஊட்டச்சத்து மாதம்) மற்றும் உலக உணவு தினம் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் போஷான் அபியான் திட்டத்தில் செப்.,ல் இதை நடத்துவர். இந்தாண்டு செப்.17ல் துவங்கி அக்.16 வரை நடந்தது. இறுதிநாளான நேற்று உலக உணவு தினம். இதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் கோலம், சத்துணவு தயாரிக்கும் போட்டி நடந்தது. அலுவலக போர்டிகோவில் 120 பணியாளர்கள் 40 குழுக்களாக பிரிந்து சமையல் போட்டி நடத்தி காட்சிப்படுத்தினர். சிறுதானியங்கள், காய்கறிகளில் கோலமிட்டு இருந்தனர். 150 பணியாளர்கள் ஆரோக்கிய உணவுகளை காட்சிப்படுத்தினர். இவற்றை பார்வையிட்ட கலெக்டர் பிரவீன்குமார் கூறியதாவது: கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடந்தது. சிறுதானியங்களில் கேக், பிஸ்கட்ஸ், வாழை இலை, வாழைத்தண்டு, முருங்கை இலை போன்றவற்றிலும், ஊட்டச்சத்து மாவிலும் கொழுக்கட்டை, குலாப்ஜாமூன், கேக் போன்றவையும் தயாரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர் என்றார். திட்ட அலுவலர் ஷீலாசுந்தரி, சமூகநல அலுவலர் காந்திமதி கலந்து கொண்டனர்.