உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆண்டுதோறும் ரத்தத்தின் தேவை அதிகரிப்பு

ஆண்டுதோறும் ரத்தத்தின் தேவை அதிகரிப்பு

மதுரை: நவீன மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையால் ஆண்டுதோறும் நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரத்தத்திற்கான தேவை 5 சதவீதம் அதிகரித்து வருகிறது. தென்மாவட்ட நோயாளிகள், கர்ப்பிணிகள், விபத்தில் அடிப்பட்டவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகின்றனர். மதுரையைச் சேர்ந்தவர்களுக்கு ரத்தம் தேவைப்படும் பட்சத்தில் ரத்தம் செலுத்திய பின் அவர்களது உறவினரிடம் இருந்து ரத்தம் தானமாக பெறப்படும். ஆனால் வெளிமாவட்ட நோயாளிகள் வரும் போது உறவினர்களிடம் ரத்த தானம் பெறுவது கடினமாக உள்ளது. இதனால் மதுரையைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களையே நம்பியே மதுரை அரசு மருத்துவமனை ரத்தவங்கி செயல்படுகிறது. 2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை 29 ஆயிரத்து 774 யூனிட்கள் ரத்தம் தானமாக பெற்று மாநில அளவில் ரத்தவங்கி முதலிடம் பெற்றது. இந்தாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 23 ஆயிரத்து 13 யூனிட்கள் தானமாக பெற்றுள்ளோம். ஆனாலும் தேவை அதிகரித்து வருகிறது என்கிறார் மதுரை அரசு மருத்துவமனை ரத்தவங்கி அலுவலர் டாக்டர் சிந்தா.அவர் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ, நர்சிங் மாணவர்களின் ரத்ததான கிளப் உள்ளது. இதன் மூலம் 400 யூனிட்கள் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது. 50 ரத்த தான அமைப்பாளர்கள் மூலம் தானம் பெறுகிறோம். கைவிடப்பட்ட நோயாளிகளாக இருப்போருக்கும் தற்போதுள்ள மருத்துவ முன்னேற்றம் வாழ்வதற்கான கூடுதல் வாய்ப்பைத் தருகிறது. ரத்தம் கொடுத்து அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்படுகின்றனர். இதனால் ஆண்டுதோறும் ரத்தத்தின் தேவை 5 சதவீதம் அதிகரித்து வருகிறது. பண்டிகை நாட்களில் ரத்ததானம் கொடுப்பதை நண்பர்கள், உறவினர்கள் குழுவாக செய்ய முன்வரவேண்டும். அதேபோல நோயாளிகளின் உறவினர்களும் ரத்ததானம் செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ