மதுரை : 'வந்து பார்...' என நெஞ்சை நிமிர்த்திய வீரர்களும், 'நின்னு பார்...' என திமிலை சிலுப்பிய காளைகளும் அனல் பறக்க களம் கண்ட மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு சும்மா... அதகளப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பரவசமடையச் செய்தது.உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு, முனியாண்டி கோயில் திடல் வாடிவாசலில் காலை 7:00 மணிக்கு வீரர்கள் உறுதிமொழியேற்புடன் துவங்கியது. அமைச்சர் உதயநிதி கொடியசைத்து துவக்கி வைத்தார். அமைச்சர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், கலெக்டர் சங்கீதா, டி.ஐ.ஜி., ரம்யாபாரதி, எம்.பி.,வெங்கடேசன், எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ், மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, வெங்கடேசன், தமிழரசி முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.முதலில் முனியாண்டி கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. முதல் சுற்றில் 40 மாடுகள் களம் இறக்கிவிடப்பட்டதில் 7 காளைகளை மட்டுமே வீரர்கள் அடக்கி பரிசு வென்றனர். தலா 50 வீரர்கள் என 10 சுற்றுகளாக 1000க்கும் மேற்பட்ட மாடுகள் களம் இறக்கப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வீரர்கள் அமைச்சர் மூர்த்தி சார்பில் வழங்கப்பட்ட முதல்வர் ஸ்டாலினின் படம் அச்சிடப்பட்ட பனியன்கள் அணிந்திருந்தனர்.ஆக்ரோஷமாக பார்வையில் மிரட்டி வாடிவாசல் வெளியே துள்ளிக் குதித்த மாடுகளை தாவி திமில்களை பிடித்து வீரர்கள் அடக்கினர். திமில் பிடித்த வீரர்களை துாக்கி வீசிய காளைகள் களத்தில் 'கெத்து' காட்டின.கெத்து காட்டிய காளைகளுக்கும், தொட்டு அடக்கிய வீரர்களுக்கும் தங்கக் காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், அண்டா, மெத்தை, சேர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் விழா குழுவினரால் கொடுக்கப்பட்டன. காளைகளின் கொம்புகள் குத்தியும், துாக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்தும் வீரர்கள் பலர் காயமடைந்தனர். போலீஸ் உட்பட 80 பேர் காயம்
காளைகள் முட்டியதில் 28 வீரர்கள், 18 காளை உரிமையாளர்கள், 27 பார்வையாளர்கள், ஆயுதப்படை போலீஸ்காரர் செந்தில், ஆம்புலன்ஸ் உதவியாளர் என 83 பேர் காயமடைந்தனர். மாடு விரட்டியதில் பெண் காவலர் மாலதிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தென் மாவட்டங்களை சேர்ந்த 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 18 காளைகளை அடக்கியகார்த்திக் முதலிடம்
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம் வென்றார். அவருக்கு அமைச்சர் மூர்த்தி கார் பரிசு வழங்கினார். 17 காளைகளை அடக்கி பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 2ம் இடம் வென்றார். ஆனால் அவர் தான் அதிகம் காளைகளை அடக்கியதாகவும், எண்ணிக்கையில் தவறு இருப்பதாகவும், கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்து பரிசை வாங்காமல் சென்றார். 12 காளைகளை அடக்கி எம்.குன்னத்துாரை சேர்ந்த திவாகர் 3ம் இடம் வென்றார். கார் வென்ற 'கட்டப்பா'
சிறந்த காளையாக திருச்சி மேலுாரை சேர்ந்த குணா என்வரின் 'கட்டப்பா' என்ற காளை முதலிடம் பிடித்தது. அக்காளைக்கு கார், பசுமாடு வழங்கப்பட்டது. மதுரை காமராஜர்புரம் சவுந்தரின் 'வெள்ளைக்காளி' காளை 2வது பரிசு வென்று, பைக்கை தட்டிச்சென்றது. 'டூப்' போடாமல் நடிப்பேன்
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட நடிகர் அருண் விஜய் கூறுகையில், அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை முதல்முறையாக பார்த்தேன். மாடு பிடி வீரர் போல் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அவ்வாறு கதை கிடைத்தால் டூப் போடாமல் நடிப்பேன். ஜல்லிக்கட்டு வீரர்கள் பாதுகாப்புடன் பங்கேற்க வேண்டும் என்றார்.
அண்ணாமலைக்குஉதயநிதி தங்கக்காசு
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின் காளை வெற்றி பெற்றது. காளையுடன் வந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உருவம் பொறித்த தங்கக்காசை அமைச்சர் உதயநிதி வழங்கினார். சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளையும் அண்ணாமலையின் காளை வென்றது.களம்கண்ட'வி.ஐ.பி.,' காளைகள்இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான், அ.ம.மு.க., நிறுவனர் தினகரன், சசிகலா, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சூரி உள்ளிட்டவர்களின் காளைகள் களம் இறங்கின. சூரி உட்பட பலரின் காளைகள் நின்று விளையாடி பரிசுகளை தட்டிச்சென்றன.உயிரிழப்பு இன்றி ஜல்லிக்கட்டுஅலங்காநல்லுாரில் நடந்த ஜல்லிக்கட்டை துவக்கி வைத்த அமைச்சர் உதயநிதி, 5 மணிநேரம் கேலரியில் அமர்ந்து போட்டியை பார்வையிட்டார். அவர் கூறுகையில் ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகள் இல்லாமல் நடத்துவதே குறிக்கோள். கார், பைக், தங்கக்காசு என முதல்வர், அமைச்சர்கள் சார்பில் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. அலங்காநல்லுார் கீழக்கரையில் உலகத்தரத்தில் பல ஆயிரம் பார்வையாளர்கள் காணும் வகையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
காத்திருந்த வெளிநாட்டினர்
போட்டி துவங்கியது முதல் மதியம் 12:00 மணி வரை அமைச்சர் உதயநிதியுடன் நடிகர்கள் அருண் விஜய், சூரி, அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் வி.ஐ.பி., கேலரியில் அமர்ந்திருந்தனர். சூரியின் மாடு அவிழ்த்து விடும் வரை உதயநிதி காத்திருந்தார். சுற்றுலாத்துறை சார்பில் ஜல்லிக்கட்டை பார்வையிட வந்த 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கேலரிக்குள் செல்ல முடியாமல் வெயிலில் காத்திருந்தனர். அமைச்சர் உதயநிதி சென்ற பின் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பேட்ரிக், அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு என்றாலே பார்ப்பதற்கு பரவசமாக இருக்கும். தொடர்ந்து 8வது ஆண்டாக மனைவியுடன் வந்துள்ளேன். காலை 9:00 மணிக்கு வந்து காத்திருந்தோம் என்றார்.
தங்கக் காசுகளில் ஸ்டாலின், உதயநிதி உருவங்கள்
n போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், காளைகளுக்கு அமைச்சர் மூர்த்தி சார்பில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உருவப்படம் பொறித்த தங்கக் காசுகள், படம் இடம் பெற்ற தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.n ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட காளைகளுக்கும், வீரர்களுக்கும் கியூ.ஆர்., கோடு உடன் கூடிய அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது.n மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, திருச்சி, கரூர், கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் போட்டியில் பங்கேற்றன.n பார்வையாளர் கேலரி, மாடுகளுக்கான மருத்துவ பரிசோதனை பகுதி, காளைகள் கலெக் ஷன் பகுதியில் இரண்டு அடுக்கு இரும்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன.n சுகாதாரத்துறை சார்பில் 90 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்தனர். 15 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. நடமாடும் மருத்துவக் குழுவினரும் பணியில் ஈடுபட்டனர்.n ஜல்லிக்கட்டை பார்வையிட வந்த நடிகர் சூரி, 'விடுதலை 2'க்கு பின் ஜல்லிக்கட்டு தொடர்பாக கதைக்களம் உள்ள படம் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன் என்றார்.n போட்டியை மாலை 5:00 மணிக்கு முடிக்க திட்டமிட்ட நிலையில் காளைகள் எண்ணிக்கை அதிகம் இருந்ததால் கூடுதலாக ஒரு மணிநேரம் போட்டி நடத்தப்பட்டது.n 9 வது சுற்று முடிந்த நிலையில் தலா 11 காளைகளை அடக்கி 3 பேர் முதலிடத்தில் இருந்தனர். இதனால் அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் அனைவரையும் 10 வது சுற்றில் களம் இறக்கியதால் போட்டி விறுவிறுப்பாக இருந்தது.n வெள்ளியம்குன்றம் ஆண்டிச்சாமி கோயில் காளை, வீரர்கள் தொடமுடியாதபடி களத்தில் நின்று விளையாடியது. அந்த காளைக்கு உதயநிதி தங்கக்காசு பரிசு வழங்கினார்.
சாதித்துக்காட்டிய அமைச்சர் மூர்த்தி
மதுரையில் நடந்த 3 ஜல்லிக்கட்டுகளையும் எந்த பிரச்னையுமின்றி நடத்தி அமைச்சர் மூர்த்தி சாதித்துள்ளார். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் கடந்த 3 நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டுக்கு முன்னதாகவே பல்வேறு பிரச்னைகள் உருவாகும். ஜல்லிக்கட்டு அன்று டோக்கனில் முறைகேடு, காளையை அனுமதிக்கவில்லை, சார்பாக செயல்படுகின்றனர் என பல புகார்கள் கிளம்பும். ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு எந்த பிரச்னைகளோ புகார்களோ இன்றி 3 ஜல்லிக்கட்டுகளும் சிறப்பாக நடந்து முடிந்தன. இதற்கு முக்கிய காரணம் அமைச்சர் மூர்த்தி நேரடியாக ஏற்பாடுகளை செய்தது தான். விழா ஏற்பாடுகள் துவங்கி காளைகள், வீரர்கள் பதிவு என ஒவ்வொன்றிலும் எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில் முன்னின்று கவனித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.