உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க.,வுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறைதீர் கூட்டத்தில் பா.ஜ., புகார்

தி.மு.க.,வுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறைதீர் கூட்டத்தில் பா.ஜ., புகார்

மதுரை: 'மதுரையில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்' என மக்கள் குறைதீர் கூட்டத்தில் பா.ஜ.,வினர் மனு கொடுத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் இக்கூட்டம் டி.ஆர்.ஓ., அன்பழகன் தலைமையில் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர் பா.ஜ., பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் முத்துக்குமார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: வாக்காளர் சரிபார்க்கும் பணியில் திருத்துதல், நீக்குதல் பணியை அந்தந்த தேர்தல் அலுவலர்கள் செய்து வருகின்றனர். அவர்களின் விவரங்களை அந்தந்த பகுதி தி.மு.க., வினரிடம் அலுவலர்கள் அளித்துள்ளனர். மேலும் தி.மு.க.,வினர் கொடுக்கும் பட்டியலையே தேர்தல் கமிஷனுக்கு அலுவலர்கள் அனுப்ப உள்ளனர். ஆளுங்கட்சியான தி.மு.க., தங்கள் இஷ்டத்திற்கு பா.ஜ., கூட்டணி கட்சியினரின் பெயர்களை நீக்க ஏற்பாடு செய்துள்ளது. இது முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரானது. தேர்தல் அலுவலர்கள் அந்தந்த வீடுகளுக்கு நேரடியாக சென்று சரிபார்க்க வேண்டும். அதன்பின்பே பட்டியலை வெளியிட வேண்டும். மேலமடை சந்திப்பு மேம்பால பணியில் இருஇடங்களில் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக வளைவுகள் (யு டர்ன்) அமைக்கப்பட உள்ளன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர். குவாரி அமைக்க எதிர்ப்பு கல்லணை, அச்சங்குளம், துாம்பக்குளம் கிராம மக்கள் மனு: கல்லணை கண்மாயை நம்பி 175 ஏக்கர் விவசாய நிலம், 50 ஏக்கர் தோட்டமும் உள்ளது. இக்கிராமத்தைச் சுற்றி ஏற்கனவே 10 குவாரிகள் உள்ளன. காற்று மாசுபாடு, ஒலிமாசுபாடு ஏற்பட்டு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் மேலும் குவாரிகளுக்கு அனுமதி வழங்கினால் மேலும் பிரச்னைகள் தீவிரமாகும். எனவே குவாரி விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி