| ADDED : ஜன 04, 2024 02:37 AM
மதுரை: 'மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 13 பிரதான கால்வாய்கள் விரைவில் துார்வார வேண்டும். பழைய 72 வார்டுகளில் உள்ள கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் இருக்க வாய்ப்பில்லை' என மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: 13 கால்வாய்களை துார்வார அ.தி.மு.க., தொடர்ந்து வலியுறுத்துகிறது. தற்போது சம்பந்தப்பட்ட கால்வாய்களில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. 72 வார்டுகளாக இருந்தபோது 2011ல் மத்திய அரசின் ஜே.என்.ஆர்.யு.எம்., திட்டத்தில் கீழ் 11 கால்வாய்களுக்கு டெண்டர் விடப்பட்டு துார்வாரப்பட்டன.கால்வாய் தரைப்பகுதியில் 'ப' வடிவ சிமென்ட் தளம் அமைக்கப்பட்டது. வண்டியூர், பந்தல்குடி கால்வாயும் நீர்வளத்துறையின் கீழ் உள்ளதால் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பின் விரிவுபடுத்தப்பட்ட 28 வார்டுகளில் செல்லும் கால்வாய்களின் சில பகுதிகள், ஓடைகள் தான் அப்போது துார்வாரப்படவில்லை. 2011 - 2021 வரை பழைய 72 வார்டுகளுக்கு உட்பட்ட கால்வாய்கள் துார்வாரப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பில்லை. அரசிடம் போதிய நிதி பெற்று துார்வாரும் பணியை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.