போலீஸ் விசாரணையில் மரணம் தடுக்க வழிகாட்டுதல் வெளியிட வழக்கு
மதுரை: போலீஸ் விசாரணையில் துன்புறுத்தல், மரணத்தை தடுக்க வழிகாட்டுதல் வெளியிட தாக்கலான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.மதுரை வழக்கறிஞர் மகாராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த ஒரு பெண் பக்தரின் காரிலிருந்த நகை திருடுபோனது. கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை ஜூன் 27ல் திருப்புவனம் போலீசார் விசாரித்தனர். போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். இது சாத்தான்குளம் போலீஸ் விசாரணையில் தந்தை, மகன் கொல்லப்பட்ட சம்பவம் போன்றது.அஜித்குமார் மரணம் குறித்து போலீசாருக்கு எதிராக புகார் செய்யாமல் இருக்க பணம் தருவதாக சில அரசியல்வாதிகள் பேரம் பேசியுள்ளனர். போலீஸ் ஸ்டேஷனில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாக வழக்கை திசை திருப்ப முயற்சி நடக்கிறது.போலீஸ் விசாரணையில் துன்புறுத்தல், மரணங்களை தடுக்க வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். அஜித்குமார் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையோர் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சத்தியசிதம்பரம், அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகினர்.நீதிபதிகள், 'இதுபோல் நிலுவையிலுள்ள மற்ற வழக்குகளுடன் சேர்த்து இன்று (ஜூலை 8) விசாரிக்கப்படும்,' என்றனர்.