ரூட்டை மாற்று; கல்லா கட்டு: * உள்ளூர் பயணிகளை சுற்றி விட்ட அரசு பஸ்கள்: விடுமுறை முடிந்து வந்து குவிந்ததால் தவிப்பு
மதுரை: மதுரையில் சிறப்பு பஸ்கள், தொலைதுார பஸ்களுக்கு டிரைவர், கண்டக்டர்களுக்கு மாற்றுப் பணி வழங்கியதால் நகருக்குள் இயக்கப்படும் பஸ்கள் முடங்கின. இதனால் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டுகளில் பஸ்கள் இன்றி பல மணிநேரம் பயணிகள் தவித்தனர்.பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் விடுமுறை முடிந்து நேற்று பணியாற்றும் ஊர்களுக்கு திரும்பினர். இதனால் காலை முதல் மதுரையில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை சமாளிக்க சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டாலும் போதிய அளவில் இல்லை.இதனால் நகருக்குள் இயக்கப்பட்ட புதிய பஸ்களை கூடுதல் சிறப்பு பஸ்களாக மாற்றம் செய்து சென்னை, திருச்சி, கோவை, திருப்பூர் என தொலைதுாரங்களுக்கு இயக்கப்பட்டன. அதற்கு தேவையான டிரைவர், கண்டக்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டனர்.இதன் காரணமாக நகருக்குள் இயக்கப்படும் மகளிர், சாதாரண பஸ்களை இயக்க டிரைவர், கண்டக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் அப்பஸ்கள் பஸ்ஸ்டாண்டுகளில் பல மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் உள்ளூர் பயணிகள் பாதித்தனர். அவர்கள் பஸ் நிலையங்களுக்குள் காத்திருந்து எப்போது பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து பயணி கருப்பையா கூறியதாவது: மேலுாரில் இருந்து டி.கல்லுப்பட்டி செல்ல மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் வந்தேன். மதியம் 12:00 மணியில் இருந்து 3:00 மணி வரை சிட்டி பஸ்கள் ஒன்று, இரண்டு தான் பஸ் ஸ்டாாண்டுக்குள் வந்துசென்றன. புதிய பஸ்கள் எதுவுமே வரவில்லை. என்னை போல் பலர் பாதித்தனர். குறிப்பாக மகளிருக்கான இலவச பஸ்கள் 10க்கு 2 பஸ் என்ற எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டன. பெரும்பாலான பஸ்களை இயக்க டிரைவர், கண்டக்டர்கள் இல்லை என விசாரித்தபோது தெரிந்தது என்றார்.இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக உதவி மேலாளர் யுவராஜிடம் கேட்டபோது, 'மதுரை கோட்டத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்கள் மூலம் நேற்று சென்னை, திருச்சி, சேலம், கோவை உட்பட பல்வேறு நகரங்களுக்கும் 581 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. பஸ்ஸ்டாண்டில் ஏராளமான பஸ்கள் நிறுத்தப்பட்டு தயாராக இருந்ததால் பயணிகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. சிறப்பு ஏற்பாடுகளால் ஊழியர்கள் பற்றாக்குறையின்றி உள்ளூர் பயணிகளுக்கும் பாதிப்பில்லை'' என்றார்.