மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி சொத்துவரி முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுவதால் மேயர் தேர்வை நடத்த முடியவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. இம்மாநகராட்சியில் வணிக கட்டடங்களுக்கு விதிமீறி குறைவாக சொத்துவரி நிர்ணயம் செய்தது தொடர்பாக 2023, 2024 ல் ரூ.150 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்தது. இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸ் விசாரணை நடக்கிறது. முறைகேடு எதிரொலியாக மதுரை மேயர், 5 மண்டலங்கள், 2 நிலைக் குழுத் தலைவர்கள் பதவியை இழந்தனர். மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன்வசந்த், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடந்துள்ளது. இந்நிலையில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால் மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயர், மண்டல தலைவர்களை நியமிக்க தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. 'முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் பதவி இழந்தோம். சொத்துவரி வழக்கில் எங்கள் பெயர்கள் இல்லை. எனவே இழந்த பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும்' என முதல்வர், அமைச்சர் நேரு உள்ளிட்டோரை முன்னாள் மண்டல தலைவர்கள் சந்தித்து வலியுறுத்தினர். அவர்களிடம் 'சொத்துவரி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக' நேரு தரப்பு தெரிவித்துள்ளது. பதவிகளை கைப்பற்ற போட்டி
சட்டசபை தேர்தலை மனதில் வைத்து மேயர், மண்டல, நிலைக் குழு தலைவர்கள் பதவிகளுக்கான தேர்தலை விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது. இப்பதவிகளை கைப்பற்றுவதில் சிபாரிசு தேடி தி.மு.க., கவுன்சிலர்கள் பலர் முட்டிமோதுகின்றனர். ஆனால் சொத்துவரி முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது மேயர், மண்டல தலைவர் தேர்தலுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: சொத்துவரி முறைகேட்டில் தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் தொடர்புள்ளது. அவர்கள் யார் என்ற விபரம் விசாரணைக்கு பின் தெரியும். அதற்குள் மேயர், மண்டல தலைவர்களை தேர்வு செய்து, அவர்கள் பெயர் அந்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுவிட்டால் ஆளுங்கட்சிக்கு அரசியல் ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தும். மேயர் தேர்வை பொறுத்துவரை அமைச்சர் மூர்த்தி கை தான் ஓங்கியுள்ளது. அவரது சிபாரிசை தான் தலைமை ஏற்கவுள்ளது. சொத்துவரி முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததை காரணம் காட்டி மேயர் தேர்வு தள்ளிப்போகிறது. மேயர், மண்டல தலைவர்கள் இல்லாத சூழலில் வார்டுகளில் திட்டப் பணிகள் கேள்விக்குறியாகி உள்ளன. தற்போதைய மார்க். கம்யூ.வை சேர்ந்த துணைமேயர், ஆய்வு என்ற பெயரில் 'மேயர்' போல் வார்டுக்குள் வலம்வருவதால் தி.மு.க.,வினர் மனசுக்குள் குமுறுகின்றனர். இதனால் கூட்டணிக்குள் உரசல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் இதுபோன்ற சூழலால் தி.மு.க.,வினரே அதிருப்தியில் உள்ளனர். மதுரை மேயர் தேர்வு விஷயத்தில் தலைமை விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்றனர்.