UPDATED : பிப் 24, 2024 06:35 AM | ADDED : பிப் 24, 2024 04:07 AM
மதுரை : லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் மதுரை நகர் போலீஸ் ஸ்டேஷன்களில் 300 போலீசார் வரை பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பாதுகாப்பு பணி, ரோந்து செல்வதில் போலீசாருக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஆயுதப்படை போலீசாரை உள்ளூர் ஸ்டேஷன்களுக்கு இடமாற்ற கமிஷனர் லோகநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை நகரில் 25 போலீஸ் ஸ்டேஷன்கள், 5 மகளிர் ஸ்டேஷன்கள் உள்ளன. மொத்தம் 3200 போலீசார் பணிபுரிய வேண்டும். ஆனால் 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த எண்ணிக்கை 3 ஆயிரத்திற்குள்தான் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி 300 போலீசார் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் பாதுகாப்பு பணி, நிர்வாக பணி, ரோந்து பணிகளில் போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. தேர்தல் நேரத்தில் இன்னும் பணிச்சுமையும், மனஅழுத்தமும் கூடும் என்கின்றனர் போலீசார்.அவர்கள் கூறியதாவது: 2019ல் கமிஷனராக டேவிட்சன் இருந்தபோது ஸ்டேஷன்களில் ஆள் பற்றாக்குறையை போக்க ஆயுதப்படை போலீசாரை இடமாற்றினார். அதன் பிறகு இதுவரை இடமாற்றம் நடக்கவில்லை. ஸ்டேஷன்களில் பணியாற்றிய பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். தேர்தல் காரணமாக வெளியூர்களுக்கு பலர் இடமாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் இடத்திற்கு இன்னும் ஆட்கள் நியமிக்கப்படவில்லை.ஆயுதப்படை போலீசாரை 'சீனியாரிட்டி' அடிப்படையில் உள்ளூர் ஸ்டேஷன்களுக்கு இடமாற்ற வேண்டும். இதனால் ஆயுதப்படையில் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க புதிதாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் உள்ள போலீசாரை நியமிக்கலாம். இதுகுறித்து கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.