உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கோடியில் ஒருவருக்கு வரும் பிறவி அல்காபா இதயநோய்

 கோடியில் ஒருவருக்கு வரும் பிறவி அல்காபா இதயநோய்

மதுரை: கோடியில் ஒருவருக்கு வரும் அரியவகை 'அல்காபா' எனப்படும் பிறவி இதயநோயால் பாதிக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு, மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனையில் உள்ள அதிநவீன (ஹைபிரிட்) அறுவை சிகிச்சை அரங்கில் நடந்த சிகிச்சை குறித்து டீன் அருள் சுந்தரேஷ்குமார், இதய அறுவை சிகிச்சை துறைத்தலைவர் அமிர்தராஜ் கூறியதாவது: வழக்கமாக இடதுமூல இதய தமனி பெருநாடியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட ஆக்சிஜன் ஏற்றப்பட்ட ரத்தம் உடலில் பல்வேறு பாகங்களுக்கு செல்லும். நெஞ்சுவலி, மூச்சுதிணறலுடன் அனுமதிக்கப்பட்ட இப்பெண்ணுக்கு இடது மூல இதய தமனியானது, நுரையீரல் தமனியில் இருந்து வந்தது. அதாவது நுரையீரல் தமனியில் இருந்து ஆக்சிஜன் இல்லாத ரத்தம் பரவியதால் சுவாசிக்க முடியாமல் திணறியுள்ளார். மேலும் இதயம், 'மயோட்ரல்' வால்வும் வீக்கமாக இருந்தது. இதுபோன்ற மாற்றுப்பிறழ்வு நோய் (அல்காபா), கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும். வழக்கமான அறுவை சிகிச்சை அரங்கில் 'கேத்லேப்பில்' தனியாக 'ஆஞ்சியோகிராம்' செய்த பின், வேறொரு அரங்கில் அறுவை சிகிச்சை செய்யப்படும். 'ஹைபிரிட்' அரங்கில் நோயாளியை இடம் மாற்றாமல் ஒரே நேரத்தில் 'ஆஞ்சியோகிராம், பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு பின், பாதிப்பை ஏற்படுத்திய ரத்தநாளம் துல்லியமாக கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டு வழக்கமான ரத்தக்குழாய் வழியே ரத்தஓட்டம் செல்லும் வகையில் 'பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் அறுவை சிகிச்சை செய்த உடனேயே இதய ரத்தநாள ஆய்வில் ரத்தஓட்டம் சீராக செல்வதை, 3 மணி நேர அறுவை சிகிச்சை முடிவில் துல்லியமாக உறுதி செய்ய முடிந்தது. இரண்டு முறை தனித்தனியாக செய்ய வேண்டிய சிகிச்சை முறைகளை 'ஹைபிரிட்' அரங்கில் ஒரே நேரத்தில் செய்ததால் நோயாளிக்கு வலியும், அசவுகரியமும், டாக்டர்களுக்கான சிகிச்சை நேரமும் குறைந்தது. தற்போது அப்பெண் குணமடைந்து வீடு திரும்பினார். தனியார் மருத்துவமனையில் இச்சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரை செலவாகும். மதுரை அரசு மருத்துவமனையில் முதல்வரின் இலவச காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னைக்கு அடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள 'ஹைபிரிட்' அரங்கில் 3 மாதங்களில் சிக்கலான 70 அறுவை சிகிச்சைகள் செய்துள்ளோம். இதயப்பிரிவு, மயக்கவியல் துறைத்தலைவர்கள் செல்வராணி, கல்யாணசுந்தரம், டாக்டர்கள் முத்துவிஜயன், கார்த்திகேயன், சரவணன், சண்முகசுந்தரம் அறுவை சிகிச்சைக்கு உதவினர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்