செப்.19ல் மாநகராட்சி மண்டலக் கூட்டம் தினமலர் செய்தி எதிரொலி
மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 3, 4ன் செப்., 17ல் நடக்க இருந்த கவுன்சிலர் கூட்டம் தினமலர் செய்தி எதிரொலியாக செப்.,19க்கு மாற்றப்பட்டது. செப்.,17ல் தி.மு.க., வின் முப்பெரும் விழா கரூரில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. அதில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், அதே நாளில் மதுரை மாநகராட்சியின் மண்டலம் 1, 3, 4ன் மாமன்றக் கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஜூன் 1ல் மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்தபோது கவுன்சில் கூட்டத்தை மேயர் நடத்தி யது சர்ச்சையை ஏற் படுத்தியது. அதுபோல் தி.மு.க., முப்பெரும் விழா நடக்கும் நாளில் மாநகராட்சியின் மூன்று மண் டலக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது கவுன்சிலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக செப்.,19க்கு மாற்றம் செய்து மாநகராட்சி நேற்று அறிவிப்பு வெளியிட்டது.