| ADDED : நவ 19, 2025 06:19 AM
அலங்காநல்லுார்: மதுரை அருகே சிக்கந்தர் சாவடியில், டூ - வீலரில் சென்றபோது, நாய் குறுக்கே பாய்ந்ததால், தடு மாறி விழுந்த கணவன் , மனைவி, பஸ்சில் சிக்கி உயிரிழந்தனர். மதுரை, ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் வெங்கடசுப்பு, 56. இவரது மனைவி பத்மாவதி, 49. அலங்காநல்லுார் ரோட்டில் பாசிங்காபுரம் அருகே டீக்கடை நடத்தி வந்தனர். இவர்கள் மகன், மகள் திருமணமாகி மும்பை, சென்னையில் உள்ளனர். நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு கணவன், மனைவி வீட்டில் இருந்து டூ - வீலரில் தங்கள் டீக்கடைக்கு சென்றனர். சிக்கந்தர்சாவடி அருகே வந்தபோது, நாய் சாலையின் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி தம்பதி கீழே விழுந்தனர். அப்போது வந்த டவுன் பஸ்சில் சிக்கி வெங்கடசுப்பு உயிரிழந்தார். தலையில் பலத்த காயமடைந்த பத்மாவதி, மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். தெரு நாய்களால் தொடர்ந்து விபத்துக்கள் நடக்கின்றன. சில நாட்களுக்கு முன் நிலக்கோட்டை அருகில் டூ - வீலரில் சென்றவர், நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி விழுந்து உயிரிழந்தார் . நேற்றைய விபத்தில் இரு உயிர்கள் பலியாகியுள்ளது.