போராடிய பக்தர் இறப்புக்கு கண்டனம்
மதுரை; ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயில் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளி பக்தர், தவறி விழுந்து இறந்த சம்பவத்திற்கு ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநிலத் துணைத் தலைவர் சுந்தர வடிவேல் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புறம்போக்கு நிலங்களை மீட்கவும் கொடும்பளூர் மாற்றுத் திறனாளி ஆறுமுகம் போராடி வந்தார். ஏப்ரலில் அலைபேசி டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது அறநிலையத் துறையும், அரசும் அலட்சியப்படுத்தின. இதனால் மீண்டும் சுதந்திர தினத்தன்று ராஜகோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியவர், கீழே விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டார். அதற்கு அரசும், அறநிலையத் துறையுமே காரணம். ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், கோபுரம் மீது ஏறும் வரை அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு, வேலை வழங்க வேண்டும், என்றார்.