நீதிமன்றங்களில் அதிக குட்டு தி.மு.க., அரசு முதலிடம் அ.தி.மு.க., கிண்டல்
மதுரை: ''இந்தியாவிலே நீதிமன்றங்கள் மூலம் அதிக குட்டுகள் வாங்கி தி.மு.க., அரசு முதலிடத்தில் உள்ளது'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கூறினார். மதுரையில் அவர் கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று அடிக்கடி ஸ்டாலின் தனக்குத்தானே பெருமையாக பேசி கொள்கிறார். நிர்வாக சீர்கேடால் கடந்த நான்கரை ஆண்டுகளில் நீதிமன்றங்கள் மூலம் இந்தியாவிலேயே அதிக அளவில் கடும் கண்டனங்களையும், குட்டுகளையும் பெற்ற அரசாக தி.மு.க., உள்ளது. இதனால் தமிழகத்திற்கு தொடர்ந்து தலை குனிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தான் பொதுச்செயலாளர் பழனிசாமி, தி.மு.க., ஆட்சியின் அவலங்களை மக்களிடத்திலும், சட்டசபையிலும் பேசி தோலுரித்துக் காட்டு வருகிறார். 'சனாதனம் தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. டெங்கு, மலேரியா, காய்ச்சலை போல எதிர்க்க முடியாது ஒழிக்கத்தான் முடியும்' என்று துணைமுதல்வர் உதயநிதி கூறினார். இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கண்டிப்புக்கு உதயநிதி ஆளானார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டு அரசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. அதுபோல் பல உதாரணங்கள் உள்ளன. உண்மை நிலை இப்படி என்றால், கடன் வாங்கும் மாநிலங்களில் முதலிடம், லாக்கப் மரணங்களில் முதலிடம், தி.மு.க., - காங்., கொண்டு வந்த நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர் தற்கொலையில் முதலிடம், போதை பொருள் நடமாட்டத்தில் முதலிடம் என தமிழகம் 'டாப்'பில் உள்ளது. இவ்வாறு கூறினார்.